அதிமுகவை மீட்க இணைந்து செயல்படுவோம் - ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் கூட்டாக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, அதிமுகவை மீட்டெடுக்க இருவரும் இணைந்து செயல்படுவோம் என்று கூட்டாக அறிவித்தனர். மேலும், விரைவில் சசிகலாவை சந்திக்க உள்ளதாக பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பாக நீதிமன்றங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தில் பழனிசாமிக்கு சாதகமாக முடிவுகள் வந்துள்ளன. மேலும், கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தனர்.

அவர்கள் இருவரையும் வீட்டின்வாயிலுக்கே வந்து, உள்ளே அழைத்துச் சென்றார் டிடிவி.தினகரன். சுமார் 30 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், "அதிமுகவை கட்சியின் தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பன்னீர்செல்வமும், தினகரனும் தனித்தனியே செயல்பட்டு வந்தனர். தற்போது இருவரும் சந்தித்துப் பேசி, அதிமுகவை மீட்டெடுக்க இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளனர்" என்றார்.

இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் தினகரன் கூறியதாவது: பண பலத்தை வைத்துக்கொண்டும், ஆணவத்துடனும் செயல்படுபவர்களிடம் இருந்து அதிமுகவை மீட்டெடுத்து, திமுகவை வீழ்த்துவோம். ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அதிமுகவை வழிநடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் பன்னீர்செல்வமும், நானும் இணைந்திருக்கிறோம்.

மனதளவில் எங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை. பழைய நண்பர் அவர். அரசியலைத் தாண்டி, அன்போடு பழகினோம். இடையில் சில காரணங்களால் பிரிந்திருந்தோம். சுயநலத்துக்காக நாங்கள் இணையவில்லை. சசிகலா தொடர்பாக இந்த சந்திப்பில் எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எம்ஜிஆர் எதற்காக அதிமுக என்ற மிகப்பெரிய இயக்கத்தை உருவாக்கினாரோ, அந்த நோக்கம் நிறைவேற வேண்டும். அனைத்து அடிப்படைத் தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். அதுதான் தமிழக மக்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நோக்கி நாங்கள் பயணிக்கிறோம். முதல்கட்டமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

சசிகலாவை சந்திப்பேன்...: தொண்டர்களை ஒன்றிணைத்து, அதிமுகவை புதுப்பொலிவுடன், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில்எப்படி இருந்ததோ, அந்த நிலைக்குக் கொண்டுவர முடிவெடுத்திருக்கிறோம். அதைநாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். சசிகலாவை சந்திக்க வேண்டுமென தகவல் தெரிவித்துள்ளோம். விரைவில் சசிகலாவை சந்திப்பேன்.

அடுத்த மண்டல மாநாட்டை கோவையில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். இடத்தை தேர்வு செய்யும் பணி விரைவில் நடைபெறும். கிரிக்கெட் மைதானத்தில் சபரீசன் உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. அரசியல் நிமித்தமான சந்திப்பு இல்லை. இவ்வாறு பன்னீர்செல்வம் கூறினார்.

இந்த சந்திப்பின்போது, அமமுக துணைப் பொதுச் செயலாளர் ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலாளர்கள் ம.கரிகாலன், கொள்கைபரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE