போகர் ஜெயந்தி, சித்தர் வழிபாட்டை நிறுத்த சதி - இந்து முன்னணி குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

திருப்பூர்: இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெளியிட்ட அறிக்கை: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் ஆண்டுதோறும் புலிப்பாணி பாத்திர சாமியால் போகர் ஜெயந்தி விழா நடத்தப்பட்டு வருகிறது.

இவ்விழா வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ளது. போகர் ஜீவசமாதி இருக்கக்கூடிய ஆலயம், புலிப்பாணி ஆசிரமத்தின் கட்டுப்பாட்டில் தற்போது வரை உள்ளது. ஆனால் நடப்பாண்டில் போகர் ஜெயந்தியை நடத்த இந்து அறநிலையத் துறையினரும், பழநி இணை ஆணையர் நடராஜனும் தடை விதித்துள்ளனர். இது சட்டத்துக்கும், ஆன்மிகத்துக்கும் புறம்பானது.

பழநி கோயிலில் போகர் சன்னதி தொன்றுதொட்டு புலிப்பாணி பாத்திர சாமிகள் முறையாக பூஜை செய்து தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கடந்த ஆண்டுகளில் போகர் ஜெயந்தி விழா அபிஷேக பூஜைகள் நடத்திய வீடியோ ஆதாரம் உள்ளது. போகர் சன்னதிக்கு வரும் பக்தர்கள், பழநி தேவஸ்தானத்துக்கு உண்டியல் வருமானத்தை அதிகமாக கொடுத்து வருகின்றனர். வருமானத்தை மட்டும் எதிர்பார்க்கும் தேவஸ்தானம், அந்த போகர் சன்னதியை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது.

பழநி தண்டாயுதபாணி சாமியை உருவாக்கிய போகருக்கு ஏதேனும் தீங்கு விளைவித்தால், அது சாமியின் கோபத்துக்கு ஆளாகி, ஆட்சிக்குக்கூட ஆபத்து நேரிடும். எனவே,போகர் ஜெயந்தி பூஜையை, கடந்த ஆண்டுபோல நடத்த அனுமதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE