கோவை விமான நிலையத்தில் கூடுதல் வாகனங்களை நிறுத்த புதிய இடவசதி

By செய்திப்பிரிவு

கோவை: கோவை விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில், கூடுதலாக 250 கார்களை நிறுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இருந்து தினமும் உள்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஷார்ஜா, சிங்கப்பூர் உள்ளிட்ட இரு வெளிநாடுகளுக்கும் நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது. நுழைவுவாயில் அருகே இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தை பயன்படுத்துகின்றனர்.

அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்துசெல்கின்றனர். அவர்களை வழியனுப்பவும், அழைத்துச்செல்லவும் கட்சியினர், நண்பர்கள், உறவினர்கள் என ஏராளமானோர் வருகின்றனர்.

இதனால் தினமும் விமான நிலையத்துக்கு வரும் வாகனங்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் விமான நிலைய நிர்வாகம் சார்பில் கூடுதலாக கார்களை நிறுத்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, கோவை சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் செந்தில் வளவன் கூறியதாவது: நுழைவுவாயில் அருகே தற்போது 200 கார்கள் நிறுத்தும் வகையில் இடவசதி உள்ளது. நுழைவுவாயில் அருகே முன்பு இருந்த விமான நிலைய ஆணையக ஊழியர்கள் குடியிருப்பு இடிக்கப்பட்டு காலியிடமாக உள்ளது.

பயணிகள் நலனை கருத்தில் கொண்டு அந்த இடத்தில் வாகன நிறுத்துமிட வசதியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. புதிய திட்டத்தால் கூடுதலாக 250 கார்களை நிறுத்த முடியும். அதுவரை வாகனங்களை தாறுமாறாக நிறுத்துவதை தவிர்க்கவும் உடனுக்குடன் வாகனங்களை அப்புறப்படுத்தவும் ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE