காரைக்குடி | கைவிடப்பட்ட சிப்காட் தொழிற்பூங்கா திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடிவு: நிலம் தேர்வு செய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரம்

By இ.ஜெகநாதன்


காரைக்குடி: காரைக்குடியில் கைவிடப்பட்ட சிப்காட் தொழிற்பூங்கா திட்டத்தை மீண்டும் கொண்டு வர முடிவு செய்துள்ள அதிகாரிகள், அதற்கான நிலத்தை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என 2012-ம் ஆண்டில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அப்போது சிவகங்கை மாவட்ட ஆட்சியராக இருந்த ராஜாராமனும் ‘காரைக்குடியில் சிப்காட் அமைந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழகத்துக்கு அறிக்கை அனுப்பினார்.

இதையடுத்து கடந்த 2015-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க காரைக்குடி அருகே கழனிவாசலில் 90.43 ஏக்கர், திருவேலங்குடியில் 1,162.81 ஏக்கர் என, 1,253.24 ஏக்கர் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக 4 வட்டாட்சியர்கள் தலைமையில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.ஆனால் அப்பகுதியில் குடியிருப்போர் நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து 2017-ம் ஆண்டு காரைக்குடி சிப்காட் திட்டத்தை கைவிட வலியுறுத்தி சிப்காட் நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்தது. 2019-ம் ஆண்டு செப்டம்பரில் காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க சாத்தியக்கூறு இல்லை எனக் கூறி அத்திட்டத்தை கைவிடுவதாக தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.

இந்நிலையில் அண்மையில் சட்டப்பேரவையில் காரைக்குடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க வேண்டுமென மாங்குடி எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்தார். அதையேற்று கைவிடப்பட்ட சிப்காட் தொழிற்பூங்கா திட்டத்தை மீண்டும் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தற்போது இத்திட்டத்தை செயல்படுத்த சிப்காட் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ஆனால் பழைய இடத்தை கைவிட்டு, வேறு இடத்தை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து மாங்குடி எம்.எல்.ஏ. கூறுகையில், ‘ சிப்காட் தொழிற்பூங்கா தொடங்கினால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சிப்காட் தொழிற்பூங்காவுக்கு குறைந்தது 500 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் தேவைப்படுகிறது. இடம் தேர்வு செய்யும் பணியில் அதி காரிகள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE