திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பிடமானது இலவச சுகாதார வளாகம்: நவீன இயந்திரங்கள் பழுது

By ர.செல்வமுத்துகுமார்

திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம்பகுதியில் ரூ.40 லட்சத்தில் நவீன வசதிகளுடன் பெண்களுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இலவச பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட பெண்கள் சுகாதார வளாகம், தற்போது, எந்தவித வசதியுமின்றி கட்டண கழிப்பிடமாக செயல்படுவது வேதனை அளிப்பதாக உள்ளது என பெண்கள் தெரிவிக்கின்றனர்.

திருச்சி மாநகராட்சி சார்பில் சத்திரம் பேருந்து நிலையம் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகே பெண்களுக்கான நவீன சுகாதார மையவளாகம் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில், 2019-ம் ஆண்டு கட்டப்பட்டது.

பெண்களுக்கான இலவச கழிப்பறை, குழந்தைகள் பராமரிப்புடன் கூடிய கழிப்பறை, தானியங்கி கதவுகள், தானியங்கி மின்விளக்குகள், கழிப்பறையின் உள்ளே மின்விசிறிகள் என நவீனதொழில்நுட்பங்களுடன் இந்த சுகாதார வளாகம் உருவாக்கப்பட்டு, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

மேலும், இந்த வளாகத்தில் 24 மணிநேரமும் ஒரு ரூபாய்க்கு ஒருலிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம், ரூ.5-க்கு ஒரு நாப்கின் வழங்கும் தானியங்கி நாப்கின் விற்பனை கருவி, நாப்கின் எரிப்பான் போன்றவையும் அமைக்கப்பட்டிருந்தன.

இங்கு பெண்கள் கழிப்பறைக்குள் செல்லும்போது எதையும் தொடத் தேவையில்லை. கதவுகள் தானாக திறக்கும். கதவு திறந்தவுடன் மின்விளக்குகள் தானாக எரியும். தாய்மார்கள் கழிப்பறைக்கு செல்லும்போது தங்களது குழந்தைகளை பத்திரமாக அமரவைத்து செல்ல குழந்தைகளுக்கான பிரத்யேக அறைகள், கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கிருமி நாசினி மருந்துகள் கொண்டு கைகளை கழுவதற்கான வசதிகள், மகளிருக்கான மருத்துவ ஆலோசனை, மாதவிடாய் சுகாதார மேலாண்மை பரிசோதனை மேற்கொள்ளும் வசதி ஆகியவை ஏற்படுத்தப்பட்டிருந்தன.

பெண்கள் சுகாதார வளாகத்தின் வசதிகள் குறித்த
அறிவிப்பு பலகை.

பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இத்தனை வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த மையம் பெண்கள் மத்தியில் பெரும்வரவேற்பைப் பெற்றிருந்தது

திறக்கப்பட்ட சில மாதங்கள் சிறப்பாக செயல்பட்ட இந்த சுகாதார வளாகம், கரோனா ஊரடங்கு காலத்தில் பூட்டப்பட்டது. பல மாதங்கள் மூடிக்கிடந்ததால் இங்கு பொருத்தப்பட்டிருந்த இயந்திரங்கள் பராமரிப்பின்றி பழுதாகின.

பின்னர், மீண்டும் திறக்கப்பட்டபோது தானியங்கி கதவு செயலிழந்தது. குடிநீர் இயந்திரம் பழுதடைந்தது. நாப்கின் இயந்திரமும் செயல்படவில்லை. மேலும், இலவசமாக 24 மணிநேரமும் செயல்பட்டுவந்த கழிப்பறையும் தற்போது காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் திறக்கப்பட்டு, ரூ.5 கட்டணம் செலுத்தி பயன்படுத்தும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

இதனால், பல லட்ச ரூபாய் செலவுசெய்து உருவாக்கப்பட்ட இந்த பெண்களுக்கான நவீன சுகாதார வளாகம் தற்போது அது தொடங்கப்பட்டதற்கான நோக்கத்துக்கு மாறாக, சுகாதாரமற்ற முறையில் ஒரு சாதாரண கட்டணக் கழிப்பிடமாக செயல்பட்டு வருகிறது.

பழுதடைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்.

இதுகுறித்து அப்பகுதியில் பணியாற்றிவரும் அகிலா கூறுகையில், ‘‘இந்த சுகாதார வளாகம் திறக்கப்பட்டபோது விமான நிலையங்களில் இருக்கும் கழிப்பறை போல அனைவரையும் ஆச்சர்யப்படுத்தும் வகையில் இருந்தது. மிகவும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டதால் பெண்கள் எந்த தயக்கமுமின்றி இதை பயன்படுத்தினர். நாப்கின் விற்பனை இயந்திரம், நாப்கின் எரிப்பான் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

ஆனால், இப்போது அங்கு செல்லவே அச்சப்படும் நிலையில் சுகாதாரமற்று உள்ளது. மக்கள் வரிப்பணத்தில் பல லட்சம் ரூபாய்செலவு செய்து ஒரு சிறப்பான திட்டத்தை உருவாக்கி, அதை சரியாக பராமரிக்காமல் வீணடிப்பது வேதனை அளிக்கிறது என்றார்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலக வட்டாரத்தில் கேட்டபோது, ‘‘இப்பகுதியில் இரவு நேரங்களில் திருநங்கைகள் சிலர் மது அருந்திவிட்டு பல சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். இரவு நேரங்களில் பெண்களுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை என்பதால், மாலை6 மணிக்கு கழிப்பறை பூட்டப்படுகிறது.

தற்போது நாள் ஒன்றுக்கு 20 முதல் 25 பேர் மட்டுமே இதை பயன்படுத்தி வருவதால் மின்சாரம் அதிகம் செலவாகும் தானியங்கி கதவுகள் இயக்கப்படவில்லை. பிறஇயந்திரங்கள் விரைவில் சரிசெய்யப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE