உள்துறை அமைச்சருடன் ஆளுநர் ஆலோசனை

By மு.அப்துல் முத்தலீஃப்

தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் டெல்லியிலிருந்து சென்னை புறப்பட்டார். புறப்படுவதற்கு முன்னர் டெல்லியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்துப் பேசினார்.

தமிழக அரசியல் சூழ்நிலை நாளுக்கு நாள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக அணிகளில் ஏற்படும் மாற்றங்கள் அடுத்தடுத்த திருப்புமுனைகளை ஏற்படுத்தி வருகிறது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு தினகரன் தரப்பினர் தனி அணியாக பிரிந்து ஊடகங்களில் பரபரப்பாக பேட்டி அளித்து வந்தனர். ஆளுநரை சந்தித்து முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என மனு அளித்தனர்.

ஆளுநர் உடனடியாக சட்டபேரவையைக் கூட்ட உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் உயர் நீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு வந்தபோது ஆளுநர் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் சட்டப்பேரவையைக் கூட்டி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்ற கட்டாயமில்லை என்று தெரிவித்தார்.

முதல்வர் மீது நம்பிக்கை இல்லை என்று ஆளுநரிடம் கடிதம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அது அவர்கள் உட்கட்சிப் பிரச்சினை என்று வாதிட்டார். அதிமுகவில் 40 எம்.எல்.ஏக்களுக்கு மேல் உடைந்து தனி அணியாக இயங்கினால் மட்டுமே பிளவாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்று சட்டப்பேரவை தலைவர் முதல்வருக்கு எதிராக மனு கொடுத்து தனியாக இயங்கி வருவதற்கு விளக்கம் கேட்டு அளிக்காத நிலையில் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்தார்.

இதையடுத்து அரசியல் சிக்கல் ஏற்பட்டது. நீதிமன்றத்தில் இதற்கு தடை கேட்டு தினகரன் அணியினர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் வழக்கமான பணிகளை கவனிக்கும் ஆளுநரின் சென்னை வரும் நிகழ்வு பரபரப்பாகி விட்டது. ஆளுநர் நேற்றே சென்னை வர வேண்டிய நிகழ்ச்சி இருந்தது. தகுதி நீக்கம் பிரச்சினை வெடித்தவுடன் அவரது வருகையும் தள்ளிப்போனது.

நேற்று டெல்லிக்கு சென்ற ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்துறை அமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த தகவல் டெல்லியில் உள்ள ஆளுநர் மாளிகையில் உறுதிப்படுத்தப்படாவிட்டாலும் மும்பை அலுவலகம் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

ராஜ்நாத் சிங்கை சந்தித்த பின்னர் மாலையில் ஜனாதிபதியையும் ஆளுநர் சந்தித்தார். இந்த சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தமாக என்று கூறப்பட்டது.

இந்நிலையில் வழக்கமான பணிகளுக்காக இன்று சென்னை வரும் நிலையில் ஆளுநர் மீண்டும் உள்துறை அமைச்சரை சந்தித்தார். இது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும் இந்த சந்திப்பும் மரியாதை நிமித்தமான சந்திப்பாக என்றே கூறப்பட்டது.

தமிழக அரசியல் சூழ்நிலை உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் போது தமிழகத்தின் பொறுப்பு ஆளுநர் 24 மணி நேரத்தில் இரண்டு முறை உள்துறை அமைச்சரை சந்திப்பது சாதாரண மரியாதை நிமித்தம் என்பது ஏற்றுக்கொள்ளும் படி இல்லை என்று அரசியல் விமர்சகர் ஒருவர் தெரிவித்தார்.

தமிழக அரசியல் சூழ்நிலை இன்றுள்ள நிலையில் ஆளுநர் சென்னை வந்தாலும் அவர் சட்டப்பேரவையைக் கூட்டுவதில் அவசரம் காட்ட வாய்ப்பில்லை, நீதிமன்ற கெடு நாளை முடிவடையும் நிலையில் நீதிமன்ற செயல்பாடுகளை கவனித்து, அரசியல் ஆலோசகர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே எந்த முடிவையும் எடுக்க வாய்ப்புள்ளது என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

திமுக சட்டப்பேரவையை கூட்ட வலியுறுத்தினாலும் தற்போது உள்ள சூழ்நிலையில் மீண்டும் வலியுறுத்த வாய்ப்பில்லை என்ற நிலையில் ஆளுநர் நிதானமாக தான் இந்த பிரச்சினையை அணுகுவார், இதற்காகத்தான் உள்துறை அமைச்சரின் ஆலோசனை பெற்றார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆளுநரின் சென்னை விஜயம் வழக்கமான ஒன்று என்ற நிலையில் இன்றுள்ள அரசியல் சூழ்நிலை அனைவரையும் உற்று கவனிக்க வைத்துள்ளது என்பதே யதார்த்தம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்