எதிரிக்கட்சித் தலைவர் போன்று செயல்படுகிறார் ஆளுநர் - முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

By செய்திப்பிரிவு

சென்னை: எந்த நோக்கத்திற்காக ஆளுநர் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்று கேள்வி எழுப்பி உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் எதிரிக்கட்சித் தலைவர் போன்று செயல்படுவதாக கூறினார்.

தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் சென்னை பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,"நான் ஆட்சி பொறுப்புக்கு வருவதற்கு முன்பு எப்படி இருந்தது தமிழகம். 10 ஆண்டுகள் பாழ்பட்டு கிடந்தது தமிழகம். முதல் 5 ஆண்டு காலம் தன் மீது இருந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்கான முயற்சியில் இருந்தார் ஜெயலலிதா. சிறைக்கு போனார். திரும்பி வந்தார். அதன் பிறகு உடல் நலம் பாதிக்கப்பட்டு மறைந்து போனார். பழனிசாமி, பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் பிரிந்து நின்று உட்கட்சி பதவி போட்டி காரணமாக தமிழகம் அனைத்து நிலைகளிலும் சீரழிந்தது. தமிழகத்தின் வரலாற்றில் மிக மோசமான ஆட்சி காலமாக இருந்தது 2016 - 2021 ஆட்சிக் காலம் இருந்தது.

திமுக ஆட்சி மீண்டும் வராதா என்று ஏங்கிக் கிடந்த தமிழக மக்களின் தாகம் தீர்க்க 2021 மே மாதம் உதயம் ஆனது தான் உதய சூரியன் ஆட்சி. 5 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனையை 2 ஆண்டுகளில் செய்து காட்டி உள்ளோம். பொருளாதாரம், கல்வி, சமூகம், சிந்தனை, செயல்பாடு ஆகிய ஐந்தும் ஒரு சேர வளர வேண்டும். அது தான் திராவிட மாடல் வளர்ச்சி.

திராவிடம் என்பது காலாவதியான கொள்கை என்று சொல்லி உள்ளார் ஆளுநர். ஆளுநருக்கு சொல்கிறேன். திராவிடம் என்பது காலாவதியான கொள்கையல்ல. சனாதனம், வர்ணாசிரமம், மனுநீதி, சாதியின் பெயரால் இழிவு செய்யப்படுவது, பெண் என்பதால் புறக்கணிப்பது ஆகியவற்றை எல்லாம் காலாவதியாக்கியதுதான் திராவிடம். அந்நிய படையெடுப்பாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும், அதனை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம். அதனால்தான் அதை பார்த்து ஆளுநர் பயப்படுகிறார்.

ஆளுநர் பயப்பட தேவை இல்லை. திராவிட மாடல் என்பது எதையும் இடிக்காது, உருவாக்கும். எதையும் சிதைக்காது, சீர் செய்யும். யாரையும் தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும். சமூக வளர்ச்சி திட்டங்கள் மூலம் அனைத்துப் பிரிவு மக்களும் வளர்ந்தது தான் திராவிட மாடல் வளர்ச்சியாக அமைந்துள்ளது.

அதிமுக போன்ற எதிர்க்கட்சி பேசுவது பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால், அரசு நிர்வாகத்தின் அங்கமாக உள்ள ஆளுநர் எதற்கு எதிரிக்கட்சித் தலைவர் போன்று செயல்பட வேண்டும். எந்த நோக்கத்திற்காக அவர் தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அமைதியை குலைக்க வந்து உள்ளாரா. தமிழகத்தின் சமூக சூழலை ஏதாவது பேசி குலைக்க அவரை அனுப்பி வைத்து உள்ளார்களா என்பது தான் மக்களின் சந்தேகமாகவும், கருத்தாகவும் உள்ளது.

சில நாட்களுக்கு முன்பு ஆங்கில செய்தித்தாளுக்கு ஆளுநர் அளித்த பேட்டியில் அரசு மீது பல்வேறு அவதூறு கருத்துகளை கூறி உள்ளார். ஆனால் அதே பேட்டியில் முதல்வர் நல்ல மனிதர் என்று கூறுகிறார். இவர் பாராட்டும் காரணத்தால் நட்பு மற்றும் கொள்கையை நான் குழப்பிக் கொள்ள மாட்டேன். ஆனால், கொள்கையை விட்டுக் கொடுக்க மாட்டேன். ஆளுநர் மூலமாக எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்கு எல்லாம் அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. இதை எல்லாம் பார்த்து நாங்கள் மிரள மாட்டோம்." இவ்வாறு முதல்வர் பேசினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE