சொத்து விவரங்களை மறைத்த புகார்: எடப்பாடி பழனிசாமி மீது சேலம் போலீஸார் வழக்குப் பதிவு

By எஸ்.விஜயகுமார்


சேலம்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, தேர்தல் பிரமாணப் பத்திரத்தில், அவரது சொத்து விவரங்கள், வருமானம் குறித்து தவறான தகவல்களை தெரிவித்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, அவர் மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப் பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியைச் சேர்ந்த மிலானி, திமுக மாவட்ட இளைஞரணி முன்னாள் அமைப்பாளர். இவர், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது புகார் தெரிவித்து, சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு ஆன்லைனில் மனு செய்தார். அவரது மனுவில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 2021-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தனது அசையா சொத்துகள், ஆண்டு வருமானம், கடன் விவரங்கள் உள்ளிட்டவற்றை, வேண்டுமென்றே தவறாக தெரிவித்துள்ளார். எனவே, எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த மனுவை பரிசீலித்த சேலம் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்ற நடுவர் கலைவாணி, புகார்மனு குறித்து சேலம் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரிக்கவும், போதிய முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்யவும், அது குறித்த அறிக்கையை வரும் 26-ம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில், புகார் குறித்து விசாரணை நடத்தும் வகையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 125 (ஏ) (i), 125 (ஏ) (ii), 125 (ஏ ) (iii) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE