கர்நாடகா ஆட்சி மாற்றத்தால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழும்: திருமாவளவன் நம்பிக்கை

By என்.சன்னாசி

மதுரை: கர்நாடகாவில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் நிகழும் என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்பி நம்பிக்கை தெரிவித்தார்.

பெங்களூரில் இருந்து மதுரை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது: ''கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் 12 தொகுதிகளில் பிரச்சாரம் செய்தேன். அவர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என, வலியுறுத்தினேன். கர்நாடகா ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். கர்நாடகாவில் பாஜக ஆட்சியை அடித்தளமாக கொண்டு 10 ஆண்டாக ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் ஊடுருவ முயற்சிக்கிறது பாஜக.

திராவிடம் மாடல் காலியாகிறது என, ஆளுநர் ரவி கூறியது கண்டனத்திற்குரியது. ஆளுநராக இருந்து கொண்டு திமுகவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.அவர் பதவி விலகவேண்டும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை விவகாரம் குறித்து ஆர்ப்பாட்டம் செய்தால் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு புதுச்சேரியில் என்ன வேலை என, அம்மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேட்கிறார். குஜராத்தைச் சேர்ந்த பிரதமர் மோடிக்கு கர்நாடகத்தில் என்ன வேலை. குஜராத்தில் உள்ளவர் ஏன் உத்திர பிரதேசத்தில் போட்டியிடுகிறார்.

இந்தியாவை ஒரே தேசமாக பார்க்கிறவர்கள் எங்கே மக்கள் பாதிக்கப்பட்டாலும் , குரல் கொடுப்பது கடமை. புதுச்சேரி ஜிப்மருக்கு தமிழகத்தின் சிதம்பரம் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து சிகிச்சைக்கு செல்கின்றனர். கேரளா ஸ்டோரி திரைப்படம் வெறுப்பு அரசியலை மையமாகக் கொண்டது. இப்படத்திற்கு பாஜக விளம்பரம் தேடுகிறது. தமிழகத்தில் இப்படத்தை அனுமதிக்கக் கூடாது. தேனி மாவட்டத்தில் தலித்துகள் தாக்கப்பட்டது பற்றி காவல்துறையிடம் பேசியுள்ளோம். இது தொடர்பான போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஆளுநர் ரவியின் படம் அவமதித்த சம்பவம் கண்டிக்கத்தக்கது.'' இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE