விநியோகத்தில் தாமதத்தை தவிர்க்க மாதவரம் உள்ளிட்ட 3 பால் பண்ணைகளில் தானியங்கி இயந்திரம்: ஆவின் நடவடிக்கை

By மு.வேல்சங்கர்

சென்னை: பால் விநியோகத்தில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்க, மாதவரம், அம்பத்தூர், சோழிங்க நல்லூர் ஆகிய 3 ஆவின் பண்ணைகளில் தலா ரூ.1.25 கோடி மதிப்பில் தானியங்கி இயந்திரத்தை கொள்முதல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

சென்னையில் ஆவின் நிறுவனம் வாயிலாக 14.20 லட்சம் லிட்டர் பால் பாக்கெட்கள் நாள்தோறும் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், சோழிங்க நல்லூர் பால் பண்ணையில் 5.50 லட்சம் லிட்டரும், அம்பத்தூர் பால் பண்ணையில் 4.20 லட்சம் லிட்டரும், மாதவரம் மத்திய பால் பண்ணையில் 4.50 லிட்டரும் தயாராகிறது. உற்பத்தியாளர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் பாலை ஆவின் பால் பண்ணைகளில் பதப்படுத்தி, அங்கிருந்து மக்களுக்கு தினசரி விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், ஆட்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால், ஆவின் பால் பண்ணைகளில் இருந்து பொதுமக்களுக்கு சரியான நேரத்தில் பால் விநியோகம் செய்ய முடியாத நிலை அவ்வப்போது ஏற்படுகிறது. அதேபோல், குறிப்பிட்ட அளவை விட கூடுதல் பால் பாக்கெட்கள் பெட்டிகளில் (டப்பில்) அடுக்கி, எடுத்துச் செல்லும் நிலையும் இருக்கிறது.

இந்நிலையில், ஆவின் பண்ணைகளில் பாலை பதப்படுத்துதல் முதல் பாக்கெட்டில் நிரப்பி, பெட்டிகளில் அடுக்கி வைப்பது வரை பணிகளை மேற்கொள்ள தானியங்கி இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய 3 பால் பண்ணைகளில் தானியங்கி இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி கூறியதாவது: ஆவின் பால் பண்ணைகளில் தற்போது பாலை பதப்படுத்தி, பாக்கெட்டில் நிரப்புவது வரைதானியங்கி இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. பால் பாக்கெட்களை பெட்டிகளில் நிரப்பி, பால்வாகனங்களில் ஏற்றுவது மற்றும் குளிர் பதனக் கிடங்கில் அடுக்கி வைப்பது போன்ற பணிகள் ஆட்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆள் பற்றாக்குறையால், பொதுமக்களுக்கு பாலை உரிய நேரத்தில் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், ஆவின் பால் பண்ணைகளில்தலா ஒரு தானியங்கி இயந்திரம்நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தானியங்கி இயந்திரம் மூலம், பாலை பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்து, பெட்டிகளில் சரியான எண்ணிக்கையில் அடுக்கி வைக்க முடியும். ஒரு மணி நேரத்தில் 12,000 பால் பாக்கெட்களை வைக்க முடியும். அந்த வகையில், மாதவரம்,சோழிங்க நல்லூர், அம்பத்தூர் ஆகிய 3 ஆவின் பால் பண்ணைகளில் தலா ஒரு தானியங்கி இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது. ஒரு தானியங்கி இயந்திரத்தின் விலை ரூ.1.25 கோடி.

தற்போது, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்ட பிறகு, 3 தானியங்கி இயந்திரங்களை தயாரித்து வழங்க ஒப்பந்தம் வழங்கப்படும். இந்த தானியங்கி இயந்திரங்களை 6 மாதத்துக்குள் தயாரித்து ஆவின் பால் பண்ணைகளில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுமக்களுக்கு பால் விநியோகத்தில் எவ்வித தாமதமும் ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

சேலம், கோவை, மதுரையிலும் தானியங்கி இயந்திரம்: சென்னையை அடுத்து சேலம், கோவை, மதுரையில் உள்ள ஆவின் பால் பண்ணைகளிலும் தலா ஒரு தானியங்கி இயந்திரம் நிறுவ ஆவின் நிறுவனம் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த 3 பால் பண்ணைகளில் தினசரி தலா 2 லட்சம் லிட்டருக்கு மேல் பாலை பதப்படுத்தி, பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இங்கும் தானியங்கி இயந்திரம் நிறுவ திட்டமிட்டு உள்ளோம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE