“திருமாவளவனை ஆளுநர் தமிழிசை விமர்சித்தது அதிகாரத்தின் உச்சம்” - புதுச்சேரி திமுக சாடல்

By அ.முன்னடியான்

புதுச்சேரி: எதிர்க்கட்சிகளை விமர்சிப்பதை துணைநிலை ஆளுநர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என புதுச்சேரி எதிர்கட்சித் தலைவரும், திமுக அமைப்பாளருமான சிவா கூறியுள்ளார்.

புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான சிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "புதுச்சேரியின் அனைத்து விவகாரத்திலும் தலையிடும் ஆளுநர், ஜிப்மர் விவகாரத்தில் ஏன் தலையிடவில்லை? ஜிப்மருக்கு எதிராக திமுக போராட்டம் நடத்தி ஒரு மாதம் ஆகியும் அதற்கு ஆளுநர் பதிலளிக்கவில்லை. இந்த நிலையில், ஜிப்மர் நிர்வாகத்தைக் கண்டித்து எங்கள் கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, நேற்று ஜிப்மர் மருத்துவமனை எதிரில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். காலையில் போராட்டம் நடந்தவுடன் மதியம் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தி எதிர்க்கட்சிகள் செய்யும் போராட்டத்தை ஆளுநர் விமர்சித்துள்ளார்.

போராட்டத்தில் பங்கேற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பிக்கு ஒட்டுமொத்த நாட்டு மக்களின் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பேசுவதற்கு உரிமை இருக்கிறது. ஆளுநராக இருந்து கொண்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதியை பார்த்து உங்களுக்கு இங்கே என்ன வேலை என்று கேட்பதற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தொகுதி வேலையை மட்டும் பார்க்கச் சொல்வதும், புதுச்சேரியை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று ஆளுநர் கூறியிருப்பது அதிகாரத்தின் உச்சமாகவே பார்க்க முடிகிறது. ஆளுநரின் இந்த சர்வாதிகார பேச்சுக்கு திமுக கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு கோரியுள்ள நிதியைப் பெருவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆளுநர் இதுவரை வாய் திறக்கவில்லை.

அரசு அறிவித்துள்ள திட்டங்களை எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பதிலளிக்காத ஆளுநர் தொடர்ந்து அரசியல் பேசுவதும், எதிர்க்கட்சிகளை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வசைபாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். இது புதுச்சேரி மாநிலத்துக்கு ஏற்றதல்ல.

ஆகவே ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகவும், அவர்களுக்கு ஜிப்மர் நிர்வாகம் தரமான இலவச சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காக ஜனநாயக முறையில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் மற்றும் அக்கட்சியின் எம்.பி, குறித்து ஆளுநர் தெரிவித்த கருத்தை திரும்ப பெற வேண்டும். எதிர்க்கட்சிகளை அதிகார துஷ்பிரயோகத்தின் மூலம் ஒடுக்கிவிடலாம் என்று மனக்கணக்கு போடுவதை ஒருபோதும் திமுக அனுமதிக்காது. ஆளுநர் அரசியல் செய்வதை நிறுத்த வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE