2024 மக்களவைத் தேர்தலையொட்டி 'திப்பு' படம் தயாராகி வருகிறது: சீமான் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

சென்னை: "பிரதமர் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை கோருபவர்கள், நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்று பேசுகிறார். அப்போது புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலை ஊக்குவித்தது யார்?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் திரையரங்கம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு படத்துக்கு தடை விதிக்கக் கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தேர்தல் வரும் சமயங்களில், முதலில் 'தி காஷ்மீர் பைஃல்ஸ்' வருகிறது, அதன்பிறகு 'புர்கா' வருகிறது, கர்நாடகா தேர்தலையொட்டி, இப்போது 'தி கேரளா ஸ்டோரி' வருகிறது.

நாட்டில் எத்தனையோ பிரச்சினைகள் இருக்கிறது. ஆனால், பிரதமர் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தடை கோருபவர்கள் நாட்டில் தீவிரவாதத்தை, பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் என்று பேசுகிறார். அப்போது புல்வாமா மாவட்டத்தில் நடந்த தாக்குதலை ஊக்குவித்தது யார்? புல்வாமா தாக்குதல் குறித்த உண்மையை எடுத்துச் சொன்ன அம்மாநிலத்தின் முன்னாள் ஆளுநரிடம், அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிடும்படி கூறியது பிரதமர் தான்.

2024-ல் நடக்கவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. 8 ஆயிரம் இந்து கோயிலை இடித்தவர், 27 தேவாலயங்களை இடித்தவர், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்துக்களைக் கொன்றவர், 2 ஆயிரம் பிராமணர்களைக் கொன்றவர், அது யார் என்றால் 'திப்பு'. இப்படி ஒரு படத்தை தயாரித்து முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தப் படம் இப்போது வராது, 2024 தேர்தலையொட்டி வெளிவரும். அன்றைக்கும் நாங்கள் எதிர்த்து போராடுவோம்.

இந்த நாடு சுதந்திரம் பெற்று, பாகிஸ்தான், வங்க தேசம் என பிரிவதற்கு முன்னால், இந்த நாட்டின் விடுதலைக்காக போராடியவர்கள் எல்லாம், பாகிஸ்தான், வங்க தேசம் உள்ளிட்ட நாடுகளில் இருக்கின்றனர். ஆனால், நாட்டின் விடுதலைக்காக ஒரு போராட்டத்தையும் செய்யாத பாஜக, ஆர்எஸ்எஸ் 20 மாநிலங்களின் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் இருக்கிறது" என்று சீமான் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE