“350+ ஆய்வுக் கூட்டங்கள், 6905 கோப்புகளில் கையெழுத்து” - 2 ஆண்டு பணிகளை அடுக்கிய முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆட்சி அமைத்து 2 ஆண்டுகளில் 350-க்கும் மேற்பட்ட துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளதாகவும், 6905 கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை, கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக அரசின் ஈராண்டு சாதனைகளை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள புகைப்படக் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து பார்வையிட்டார். மேலும், தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" என்ற ஈராண்டு சாதனை மலர், முதல்வர் உதிர்த்த முத்துக்கள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவித்த அறிவிப்புகள், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரைகள், முதல்வரின் உரைகள், காலப்பேழை புத்தகம், ஈராண்டு சாதனைகளை விளக்கும் தொகுப்புக் காணொலி ஆகியவற்றை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்…” உங்களால் மறக்க முடியாத குரல் இது. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தமிழக மக்களாகிய உங்களுடைய அன்போடு, ஆதரவோடு முதல்வர் பொறுப்பில், தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல என்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டேன். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை நிறைவேற்ற முடியுமா, எடுத்துக் கொண்ட பணியை முடித்துக் காட்ட முடியுமா என்று என்னை நானே கேட்டுக்கொண்டபோது, என் மனதிற்கு தெம்பும் தைரியமும் கொடுத்தவர்கள் மூன்று பேர். பெரியார், அண்ணா, கருணாநிதி.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சனாதனத்தால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழ் மக்களை - திராவிட இனத்தை தன்னுடைய 95 வயது வரையில் ஓயாத உழைப்பால் சுயமரியாதை கொண்ட சமுதாயமாக மாற்றிக் காட்டியவர் பெரியார். சுயமரியாதை பெற்ற இனம் தனக்கான உரிமைகளைப் பெற்றாக வேண்டும் என்ற உயர்ந்த இலட்சியத்தோடு ஏழை, எளிய மக்களுக்கான அரசியல் இயக்கத்தை உருவாக்கி, ஆட்சி அமைத்துக் காட்டியவர் அண்ணா. தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றிக் காட்டக்கூடிய சாதனைகளை, திட்டங்களை, அதன் மூலமாக ஆட்சி என்பதற்கான இலக்கணம் என்ன என்பதை இந்தியாவிற்கே வழிகாட்டியவர் நம்முடைய கருணாநிதி.

இவர்கள் மூன்று பேரையும் மனதில் நினைத்துப் பார்த்தேன். அவர்களோடு அம்பேத்கர், காமராஜர், ஜீவானந்தம், கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் உள்ளிட்டவர்களும் என் மனதில் தோன்றினார்கள். ஏற்றுக்கொண்ட பொறுப்பை நிறைவேற்றிக் காட்ட முடியும் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் தானாக எனக்கு வந்து விட்டது.

மக்களுக்காகப் பணியாற்றுவது என்பது எனக்குப் புதிதல்ல. பிறந்து வளர்ந்ததே பொது வாழ்க்கையுடைய அத்தனை தன்மைகளையும் எதிர்கொண்ட கோபாலபுரம் வீட்டில்தான் சிறுவனாக, இளைஞனாக வளர்ந்தபோதே திராவிட இயக்கத்துக்கு என்னை ஒப்படைத்துக் கொண்டு, தலைவர் கருணாநிதி இட்ட கட்டளையை மீறாமல் பணியாற்றி வந்திருக்கிறேன். 50 ஆண்டுகளுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன், பல சோதனைகளை நான் சந்தித்திருக்கிறேன்.

"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்" என்றார் அண்ணா. "இதையும் தாங்கிப் பழகு" என்று எனக்கு கற்றுக் கொடுத்தார் நம்முடைய கருணாநிதி. தன்னைத் தாக்குபவர்களையும் தாங்கி நிற்கிற நிலம் போன்றது நம்முடைய திராவிட இயக்கம். அதனால்தான், சட்டமன்றத் தேர்தலில் நான் வெற்றிபெற்று, அந்த வெற்றிச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டு கருணாநிதி ஓய்விடத்திற்குச் சென்று அங்கே அதைக் காணிக்கையாக்கி, அப்போது நான் சொன்னேன், "எங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து செயல்படக்கூடிய அரசாக எங்கள் அரசு இருக்கும்" என்று பத்திரிகையாளர்களிடம் அன்றைக்கு நான் சொன்னேன்.

தமிழகத்தில் உள்ள அத்தனை பேருக்கும்தான் நான் முதல்வர். இது தமிழக மக்கள் தந்த பொறுப்பு. அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியது என்னுடைய கடமை. என்னால் முடிந்த அளவு பணியாற்றுகிறேன், ஓய்வின்றிப் பணியாற்றுகிறேன், என் சக்திக்கு மீறி பணியாற்றுகிறேன். அந்த உழைப்பின் பயனை தமிழக மக்களான உங்களுடைய முகங்களில் பார்க்கிறேன். நீங்கள் பேசுகிற வார்த்தைகளில் கவனிக்கிறேன். நீங்கள் காட்டுகின்ற அன்பில் கரைகிறேன். நீங்கள் என்னை நம்பி ஒப்படைத்த பணியை சரியாக செய்து கொண்டிருக்கிறேன் என்பது என் மனதிற்கு நிம்மதியைத் தருகிறது.

இந்த இரண்டு ஆண்டுகளில் நம்முடைய அரசு நிறைவேற்றிய திட்டங்களால் பயனடைந்தவர்கள் இங்கே பேசும்போது, ஒவ்வொரு வார்த்தையும் உதட்டிலிருந்து வரவில்லை, அவர்களுடைய இதயத்தில் இருந்து வருகிறது. திராவிட மாடல் என்றால் என்ன என்று கேட்கிறவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. உங்களுடைய மகிழ்ச்சியும் உங்களுடைய புன்னகையுமே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறது.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று திருக்குறள் சொல்கிறது. எல்லாருக்கும் எல்லாம் என்று சொல்வது திராவிட மாடல். மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்க்கிறவர்களுக்கு திராவிட மாடல் என்றால் புரியாது. தமிழகத்திற்கு விடியல் ஏற்படும் என்ற நம்பிக்கையோடு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்து ஆட்சியில் உட்கார வைத்த மக்களுக்கு, அறிவார்ந்த தமிழக மக்களுக்கு திராவிட மாடல் என்றால் என்ன என்பது நன்றாகப் புரியும். "மக்களுக்கு சம்பந்தமில்லாத பதவியில் இருக்கின்றவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம் கடமையை செய்தால் போதும் என்கிற குறிக்கோளுடன் நான் செயல்படுகிறேன்."

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பயணத்தை தமிழகத்தில் இருக்கிற 234 தொகுதிகளுக்கும் நான் நடத்தினேன். மக்களிடம் மனுக்களை பெற்றபோது நான் சொன்னது, ''உங்கள் கவலைகளை – உங்கள் கோரிக்கைகளை - உங்கள் எதிர்பார்ப்புகளை – என்னிடம் ஒப்படைத்திருக்கிறீர்கள்.” இனி இதெல்லலாம் என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள்.

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் இதற்கெல்லாம் 100 நாட்களில் தீர்வு காண்பேன்"- என்று உறுதி கொடுத்தேன். சொன்னதைச் செய்வதுதான் திராவிட மாடல். மனு கொடுத்தவர்கள் எங்களுக்கு வாக்களித்தவர்களா? வாக்களிக்காதவர்களா? என்று பிரித்துப் பார்க்கவில்லை. தி.மு.க ஜெயித்த தொகுதியா? தோற்ற தொகுதியா? என்று பார்க்கவில்லை. பெரும்பாலான கோரிக்கைகளை நாங்கள் இன்றைக்கு நிறைவேற்றியிருக்கிறோம்.

இன்றைக்குக்கூட இந்த நிகழ்ச்சியில் சாதனைகளை மட்டும் சொல்லுகிற நிகழ்ச்சியாக இல்லாமல் ‘புதுமைப் பெண்’ – ‘நான் முதல்வன்’ திட்டங்களின்கீழ் ஆணைகளும், ஒரு இலட்சம் பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை வழங்குகின்ற விழாவாகவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்பது, இரண்டாண்டு காலமாக ஏழை மக்களின் நலன் காக்கக்கூடிய குடியிருப்பாக மாறியிருக்கிறது. தலைமைச் செயலகம் என்பது தமிழக மக்கள் ஒவ்வொருவரையும் முன்னேற்ற உழைக்கும் முதன்மைச் செயலகமாக மாறியிருக்கிறது.

இந்த ஆட்சியின் முகம் என்பது அதிகாரம் முகம் அல்ல, அன்பு. இந்த ஆட்சியின் முகம் என்பது ஆணவம் அல்ல, ஜனநாயகம். இந்த ஆட்சியின் முகம் என்பது அலங்காரமல்ல, எளிமை. இந்த ஆட்சியின் முகம் என்பது சர்வாதிகாரமல்ல, சமத்துவம். இந்த ஆட்சியின் முகம் என்பது சனாதனமல்ல, சமூகநீதி. அதனால்தான் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. பலரால் விரும்பப்படுகிறது.

நமது ஆட்சி என்பது, சமூகநீதி - சமநீதி - சுயமரியாதை - சமதர்மம் - சகோதரத்துவம் ஆகிய உயரிய பண்பாட்டின் அடிப்படையில் அமைக்கப்பட்டிருக்கக்கூடிய ஆட்சி. இரண்டு ஆண்டுகளை முடித்துவிட்டு, இப்போது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். தமிழகத்தில் வாழும் எட்டு கோடி மக்களும் ஏதாவது ஒரு விதத்தில் நன்மையை அடைந்திருக்கும் ஆட்சியாக நமது திராவிட மாடல் ஆட்சி அமைந்திருக்கிறது.

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தார்கள் என்றால், அந்தக் குழந்தைகளுடைய ஊட்டச்சத்தை உறுதி செய்யக்கூடிய திட்டப்படி சத்தான உணவை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படிக்கின்ற ஒரு மாணவனோ - மாணவியோ இருந்தால், அவர்களுக்கு காலைச் சிற்றுண்டியை நம் அரசு வழங்குகிறது. உங்கள் வீட்டில் அரசுப் பள்ளியில் படித்து, காலேஜுக்குப் போகின்ற ஒரு மாணவி இருந்தால், புதுமைப்பெண் திட்டம் மூலமாக அவர்களுக்கு மாதா மாதம் ஆயிரம் ரூபாயை நம் அரசு வழங்குகிறது.

உங்கள் வீட்டில் இருக்கின்ற எல்லா பெண்களுக்கும் பஸ்ஸில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிற வசதியை நம் அரசு உருவாக்கித் தந்திருக்கிறது. உங்கள் வீட்டில் கல்லூரிக்குப் போகிற மாணவர் இருந்தால், அவரை எல்லா விதத்திலும் வேலைவாய்ப்புக்குத் தகுதிப்படுத்த, 'நான் முதல்வன்' திட்டம் மூலமாக நம் அரசு பயிற்சி தருகிறது.

விவசாயி இருந்தால், அவருக்கு நம் அரசு இலவச மின் இணைப்பு கொடுக்கிறது. மகளிருக்கு சுய உதவிக் குழுக்களின் மூலமாக அதிக கடனுதவியை நம் அரசுதான் கொடுத்துக் கொண்டிருக்கிறது! திருநங்கையர் - மாற்றுத்திறனாளிகள் – கோயில் பூசாரிகள் - மீனவர்கள் - தொழிலாளர்கள் என அனைத்து வகைப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்கி கைதூக்கி விடுகிறது நம் அரசு.

அரசு ஊழியர்களின் நலன் காத்து அவர்களைப் பாதுகாத்து வேலைவாய்ப்புகளை உருவாக்கியும் தருகிறது நம் அரசு! புதிய தொழில் முதலீடுகள் மூலமாக ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருவது நம்முடைய அரசு. ஆண்-பெண், கிராமம்-நகரம், குழந்தைகள்-முதியோர் என எல்லா வகையிலும் எல்லாருக்குமான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவது நமது அரசு. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்றார் அண்ணா. மக்களின் மகிழ்ச்சியே என்னுடைய மகிழ்ச்சி.

மாதவரம் பால்பண்ணை அருகே தள்ளுவண்டி உணவுக்கடை வைத்திருந்தவர் மேரியம்மாள். கைம்பெண் உதவித்தொகை கேட்டு கடந்த ஆட்சியில் விண்ணப்பித்து அவருக்கு அது கிடைக்கவில்லை. நம்முடைய ஆட்சி வந்ததும், மாதம்தோறும் 1000 ரூபாய் அவருக்கு உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. மேரியம்மாளின் மகிழ்ச்சிதான், என்னுடைய மகிழ்ச்சி.

தரமணியைச் சேர்ந்த சஜீத், செவித்திறன் குறைபாடு கொண்ட சிறுவன். அந்தக் கருவியை வாங்குவதற்குப் பணமில்லை. அந்தச் சிறுவனுக்கு நானே என் கையால், காதொலிக் கருவியை பொருத்திவிட்டேன். அருகில் இருந்து வரக்கூடிய சத்தங்களையெல்லாம் கேட்டு சஜீத் சிரித்தார், அந்த அழகைப் பார்த்தபோது எனக்கு எனக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது!

டானியா என்ற பள்ளிச் சிறுமியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டருப்பீர்கள். திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இப்போது ஒன்பது வயது. நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்கள். முகச்சிதைவு நோய் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த அந்தச் சிறுமியை, கூட படிக்கிற சில மாணவர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று செய்தி கிடைத்தது. உடனே அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்தோம். இப்போது மகிழ்ச்சியாக பள்ளிக்குப் சென்று வருகிறார்கள். அவர்களுடைய வீட்டிற்கே நேரில் சென்று அந்த சிறுமியின் முகத்தில் அரும்பிய அந்தப் புன்னகையை பார்த்து, வாழ்த்தி விட்டு வந்தபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. மெரினா கடலில் கால் நனைக்கும்போது மாற்றுத்திறனாளி பவானி கணேஷ் அவர்கள் அடைந்த மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சி.

விளிம்பு நிலை மக்களாக இருக்கிற இருளர் – நரிக்குறவர் மக்களுக்கும் என்ன தேவை என்று கவனித்து எல்லா மாவட்டத்திலும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுத்து, அவர்களுடைய சுயமரியாதையையும் மாண்பையும் நிலைநாட்டியிருக்கிறோம். அவர்களுடைய வீட்டிற்கே சென்று நான் காலை உணவு சாப்பிட்டேன். சாப்பிட்டபோது அந்த உணவு காரமாக இருந்தது. ஆனால் அதைவிட அன்பு அதிகமாக இருந்தது, அந்த அன்புதான் இன்றைக்கு நம் அரசு இந்தப் பெயரை, இந்தச் சிறப்பை பெற்றிருக்கிறது. மக்களுடைய முகத்தில் மகிழ்ச்சியை செயற்கையாக வர வைக்க முடியாது. இதயம் மகிழ்ந்தால்தான் இயற்கையாக முகமும் மலரும்.

நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், கோடிக்கணக்கான மக்களுடைய இதயத்தில் மகிழ்ச்சியும், முகத்தில் மலர்ச்சியும் நிறைந்திருக்கிறது. அதை, நான் ஒவ்வொரு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்கிறபோது கவனிக்கிறேன். மாவட்டம்தோறும் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களின் மூலமாக, வீட்டுமனைப்பட்டா, கல்விக் கடனுதவி, சுயதொழில் தொடங்க கடனுதவி,கூட்டுறவுக் கடன்கள்,நகைக் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன்கள், உழவர்களுக்கு புதிய இலவச மின் இணைப்பு, பயிர்க்கடன்கள், புதிய ஓய்வூதிய ஆணைகள், மாணவ மாணவியர்க்கு விலையில்லா சீருடைகள், காலணிகள், புத்தகப் பைகள், உழவர்களுக்கு மரக்கன்றுகள், வேளாண் பொருள் தொகுப்புகள், கோவில் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகைகள், சாலைகள், மேம்பாலங்கள், குடியிருப்புகள், சத்துணவு மையங்கள், சமூக நலக் கூடங்கள் என்று எத்தனையோ திட்டங்களை மாவட்டம்தோறும் - நகரங்கள் தோறும் நாம் செய்து கொடுத்திருக்கிறோம். துறைகள்தோறும் சாதனைகளை செய்து காட்டி கொண்டிருக்கிறோம்.

சென்ற ஆட்சியில் சீரழிந்து கிடந்த அரசு, அந்த அரசினுடைய நிர்வாகம், அதை சீர் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை இன்றைக்கு நாம் எடுத்து வருகிறோம். தலைமைச் செயலகத்தில் என் தலைமையில் இதுநாள் வரை 350-க்கும் மேற்பட்ட துறைரீதியான ஆய்வுக் கூட்டங்கள் நடந்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ஆட்சிப் பொறுப்பேற்று இதுநாள் வரை 6905 கோப்புகளில் கையெழுத்திட்டிருக்கிறேன்.

அதோடு நிற்கவில்லை. கோட்டையில் தீட்டுகிற திட்டங்கள் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேர்வதை உறுதிப்படுத்த ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தைத் தொடங்கி இதுவரை நான்கு கட்டங்களில், 16 மாவட்டங்களில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தியிருக்கிறேன். இப்படி இரண்டாண்டு சாதனைகளை முழுவதுமாக சொல்லி முடிக்க வேண்டுமென்றால், இன்னும் இரண்டு நாட்கள் நீங்கள் இங்கேயே தங்கி இருக்க வேண்டும்.

சொன்னதைச் செய்வோம்- செய்வதைச் சொல்வோம் என்பது கருணாநிதியின் நடைமுறை. அப்படித்தான் ஆட்சி நடத்தினார். ஆனால் நமது திராவிட மாடல் அரசு, சொல்லாததையும் செய்வோம் - சொல்லாமலும் செய்வோம் என்கிற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது.

முதல்வராக நான் பொறுப்பேற்றபோது கடந்த ஆட்சியாளர்கள் விட்டுச் சென்ற தமிழகத்தின் பொருளாதார நிலைமை என்ன? அரசாங்க கஜானாவினுடைய நிலைமை என்ன? அதையெல்லாம் மாற்றி, இருண்டு கிடந்த தமிழகத்தில் விடியலை உண்டாக்கியிருக்கிறோம்.

மத்திய அரசிடம் இருந்து தமிழகத்தின் உரிமைகளைக் காப்பாற்ற என்ன செய்ய வேண்டுமே அதையெல்லாம் செய்து கொண்டு வருகிறோம். வளமான தமிழகத்தை - இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாகத் தமிழகத்தை- எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் தமிழகத்தை உருவாக்கிவிட முடியும் என்கிற நம்பிக்கை நமக்கு அதிகமாக இருக்கிறது.

உங்களுடைய மகிழ்ச்சியும், வாழ்த்துகளும் நம்முடைய இலக்கை நோக்கி என்னை இன்னும் அதிகமாக உழைக்க வைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற உழைப்பேன். உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக என்றும் இருப்பேன். ஆட்சியின் ஐந்தாண்டுகளும் உங்களின் நலனுக்காக இருக்கும். அதன்பிறகும், உங்கள் ஆதரவோடு தொடரும் என்ற நம்பிக்கையோடு என் உரையை நிறைவு செய்கிறேன்" என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்