கிருஷ்ணகிரி அருகே ஏரியில் முகாமிட்ட 2 காட்டு யானைகள் - வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள தேவசமுத்திரம் ஏரியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ள நிலையில், அவற்றைக் காண மக்கள் அதிகளவில் திரண்டனர்.

தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி மற்றும் பஞ்சப்பள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 2 காட்டு யானைகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் பகுதியில் கிருஷ்ணகிரி – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி சுற்றித் திரிந்தன. இந்த யானைகளை, வனத்துறையினர் பாதுகாப்பாக, தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் சஞ்சீவிராயன் மலை பகுதிக்கு விரட்டினர்.

அங்கு முகாமிட்டிருந்த யானைகள் தாக்கியதில் மொரசுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் வேடி (60) உயிரிழந்தார். தொடர்ந்து வனத்துறையினர் 2 யானைகளையும் கண்காணித்து வந்த நிலையில், இன்று அதிகாலை 5 மணியளவில், கிருஷ்ணகிரி நகரை ஒட்டியுள்ள தேவசமுத்திரம் ஏரியில் அவை முகாமிட்டன. இந்த யானைகள் ஏரியில் உள்ள தண்ணீரில் ஆனந்த குளியலிட்டு விளையாடின.

ஏரியில் யானைகள் முகாமிட்டுள்ளதை அறிந்த, கிருஷ்ணகிரி நகர பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதனால் கிருஷ்ணகிரி – தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் போலீஸார், பொதுமக்களை அங்கிருந்த கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

வனத்துறையினர் தொடர்ந்து யானைகளைக் கண்காணித்து வருகின்றனர். மேலும், யானைகள் முகாமிட்டுள்ள ஏரியின் நடுவே மின் கம்பம் உள்ளதால் யானைகளை மின்சாரம் தாக்கும் ஆபத்து ஏற்படலாம் என்பதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இன்று (6-ம் தேதி) மாலை இந்த 2 யானைகளையும் கிருஷ்ணகிரி அருகே உள்ள சோக்காடி வனப்பகுதிக்கு அல்லது கூசுமலை வழியாக மேல் மலை வனப்பகுதிக்கு விரட்டும் முயற்சியை கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை வனத்துறையினர் மேற்கொள்ள உள்ளனர்.

முன்னதாக, வனத்துறையினர் கூறும்போது, "இன்று மாலைக்கு மேல் யானைகளை விரட்டும் பணி தொடங்க உள்ளதால், தேவசமுத்திரம் ஏரியை ஓட்டியுள்ள துரிஞ்சிபட்டி, தேவசமுத்திரம், நெக்குந்தி, அவதானப்பட்டி, துவாரகபுரி, கிருஷ்ணகிரி அணை பகுதிகளில் வசிக்கும் கிராம மக்கள் 2 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும். குறிப்பாக இரவு நேரங்களில் யாரும் மலைப் பகுதிக்கு வர வேண்டாம்" என அறிவுறுத்தியிருக்கிறோம் என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE