7 நாட்களுக்குள் மின் இணைப்பு வழங்கும் திட்டம் - வரைவு அறிக்கை வெளியிட்டு கருத்துகேட்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் புதிய மின் இணைப்பு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், நுகர்வோருக்கு அபராதம் வழங்கும் திட்டம் குறித்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வரைவு அறிக்கை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், மின் விநியோக விதிகளில் புதிய திருத்தங்களைக் கொண்டு வர உள்ளது. இதற்காக வரைவு அறிக்கை வெளியிட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கையில் நுகர்வோருக்குச் சாதகமான விஷயங்கள் இடம் பெற்றுள்ளன.

இப்புதிய திருத்தங்களின்படி, புதிய இணைப்பு கேட்டு விண்ணப்பித்து 7 நாட்களுக்குள் மின்இணைப்பு வழங்க வேண்டும். தவறும்பட்சத்தில், விண்ணப்பதாரருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 வீதம்அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை அபராதம் வழங்க வேண்டும்.

மேலும், பழுதடைந்த மீட்டர்களை 7 நாட்களுக்குள் மாற்றாவிட்டால் ஒரு நாளைக்கு ரூ.100 வீதம் அதிகபட்சமாக ஆயிரம் ரூபாய் வரை மின்வாரியத்துக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், நுகர்வோருக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். 6 மணி நேரத்துக்கு மேல் மின் தடை நீடித்தால் நுகர்வோருக்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும்.

பொதுமக்களிடம் இருந்து கருத்துக் கேட்ட பிறகு, இப்புதிய திருத்த விதிகள் அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE