மதுரை சித்திரை திருவிழா | பொதுமக்கள் பாதுகாப்புக்கு போலீஸ் முக்கியத்துவம் - காவல் ஆணையர் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை

By என்.சன்னாசி

மதுரை: ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் முத்திரை பதிப்பது போன்று சிறப்பு பெறுகிறது சித்திரைத் திருவிழா.

மீனாட்சி அம்மன், அழகர் மலையில் வீற்றிருக்கும் கள்ளழகர் என இரு கோவிலுக்கான இத்திருவிழா சுமார் 22 நாளுக்கு மேலாக நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இத்திருவிழாவிற்கென போலீஸ் பாதுகாப்பு என்பதும் முக்கியத்துவம் பெறும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே பாதுகாப்பு குறித்த ஆலோசனை, பாதுகாப்பு வழிமுறைகளுக்கான பட்டியல்களை தயாரிப்பதில் மதுரை மாநகரம், மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மெனக்கிடுவர்.

அந்த வகையில் இவ்வாண்டுக்கான சித்திரை திருவிழா பாதுகாப்பில் விஐபிக்களை விட பொது மக்களுக்கான பாதுகாப்பில் அதிக முக்கியம் செலுத்தியது மதுரை மாநகர காவல்துறை. கடந்த ஆண்டு இத்திருவிழாவின் போது, கோரிப்பாளையம் பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தை மனத்தில் கொண்டு, இது போன்ற அசம்பாவிதம் இம்முறை நடந்திடக்கூடாது என்பதில் மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் உள்ளிட்ட அதிகாரிகள் அதிக கவனம் செலுத்தினர். இதற்கான பாதுகாப்பு ஒத்திகை, முன் தயாரிப்பின்படி பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படடது.

குறிப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ஆழ்வார்புரம் மற்றும் கோரிப்பாளையம் பகுதியில் கூடும் பக்தர்கள் நெரிசலில் சிக்காமல் சுவாமியை தரிசிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆழ்வார்புரத்தில் கள்ளழகர் செல்லும் வழியில் இருபுறமும் தேவையின்றி மக்கள் உள்ளே வராதபடி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு இருந்தன. குறுக்கு சந்து பகுதியில் இருந்து மக்கள் வருவது தடுப்பது, ஆற்றுப்பகுதிக்கு அவசியமின்றி காவல்துறையோ அல்லது விஐபிக்கள் வாகனங்களோ வருவது தடுக்கப்பட்டது.

விஐபிக்களின் வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்திவிட்டு, பாலத்தில் வடக்கு பகுதியில் ஏற்படுத்திய தற்காலிக பாதையில் ஆற்று பகுதிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்தது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மேற்கொண்டது. மேலும், அப்பகுதியில் நவீன கேமராக்கள் பொருத்திய ‘ட்ரோன்’களை பறக்கவிட்டு, அதன்வழியே பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல் ஆணையர் நரேந்திரன் மற்றும் துணை ஆணையர்கள் கவனித்துக்கொண்டே இருந்தனர்.

இதுபோன்ற பக்தர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கையால் கூட்ட நெரிசலில் மக்கள் பெரியளவில் சிக்குவது தவிர்க்கப்பட்டது. இதற்காக பல்வேறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. இம்முறை கள்ளழகருக்கென வைகை ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரில் மூழ்கி ஓரிருவர் இறந்தது போன்ற சம்பவம் தவிர, வேறு எவ்வித அசம்பாவிதமும் நடக்கவில்லை என, மாநகர காவல்துறையினரை மக்கள் பாராட்டுகின்றனர்.

காவல்துறையினர் கூறுகையில், ‘பொதுவாகவே மீனாட்சி கோயிலில் நடக்கும் சித்திரை திருவிழா, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளைவிட, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண கிராமப்புறங்களில் இருந்தும் ராமநாதபுரம், சிவகங்கை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அதிகமாக கூடுவர். இதனால் தல்லாகுளம், கோரிப்பாளையம், வைகை ஆற்றுப்பகுதியில் மக்கள் வெள்ளம் புரளும் என்பதை கவனத்தில் கொண்டு உரிய விதிமுறைகளை பின்பற்றி பொதுமக்களுக்கான பாதுகாப்பில் முக்கியத்துவம் கொடுத்தோம்.

மதுரை மாநகர போலீஸார், அதிகாரிகளும் மீனாட்சி அம்மன் கோயிலில் கொடியேறியது முதல் தொடந்து இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். கள்ளழகர் திருவிழாவிற்கென வெளிமாவட்டத்தில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சுமார் 5 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டனர். நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் வைகையில் கள்ளழகர் இறக்கும் விதமாக மண்டகப்படியில் முன்கூட்டியே எழுந்தருள் செய்யப்பட்டது. ஆனாலும், வைகை ஆற்று தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் இருந்திருந்தால் அதில் மூழ்கி ஓரிருவர் இறந்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். இருப்பினும், கூட்ட நெரிசலில் சில குற்றச்செயல்கள் நடந்திருந்தால் சிசிடிவி பதிவுகள் மூலம் கண்டறிந்து, சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE