எடப்பாடி பழனிசாமியிடம் ஓ.பி.எஸ்-ஐ அதிமுகவில் சேர்க்க வலியுறுத்த மாட்டோம்: அமித் ஷா திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

பெங்களூரு: ‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்த மாட்டோம். பாஜக ஒருபோதும் அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிடாது’’ என்று பாஜக மூத்த தலைவர் அமித் ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித் ஷா தனியார் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது செய்தியாளர், ‘‘தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துவீர்களா?’’ என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அமித் ஷா பதில் அளிக்கையில்,‘‘ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக் கொள்ளுமாறு எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்த மாட்டோம். அவர்கள் இருவருக்குமான பிரச்சினையில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஏனெனில் இது அக்கட்சியின் உள் விவகாரம். அவர்கள் இருவரும் பேசி முடிவெடுக்க வேண்டும். மற்ற கட்சியின் உள்விவகாரத்தில் தலையிடுவதை பாஜக த‌ரக்குறைவாக கருதுகிறது'' என்று பதிலளித்தார்.

இதனால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் வருத்தம் அடைந்துள்ளனர். அதேவேளையில் எடப்பாடி பழனிசாமி மேலும் பலம் வாய்ந்தவராக மாறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE