கிருஷ்ணகிரியில் தொடர் மகசூல் பாதிப்பால் 12 ஏக்கரில் 850 மா மரங்களை வெட்டிய விவசாயி

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி: தொடர் மகசூல் பாதிப்பால், போச்சம்பள்ளி பகுதியைச் சேர்ந்த விவசாயி 12 ஏக்கரில் இருந்த 850 மா மரங்களை வெட்டி அகற்றியதோடு, மேலும் 3 ஏக்கரில் உள்ள மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேருக்கு மேல் விவசாயிகள் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 2 லட்சத்து 52 ஆயிரத்து 436 மெட்ரிக் டன் மா மகசூல் கிடைக்கிறது. மா விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் 1 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர்.

வருவாய் இழப்பு: இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் மா மகசூல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் தொடர் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். நிகழாண்டில் பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல விவசாயிகள் மா மரங்களை வெட்டி, அகற்றி மாற்றுப் பயிர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆண்டுக்கு ரூ.4 லட்சம் செலவு: போச்சம்பள்ளி அருகே விருப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கநாதன் என்பவர் தனக்குச் சொந்தமான 15 ஏக்கரில் கடந்த 20 ஆண்டாக பலன் அளித்து வந்த மா மரங்களை வெட்டி அகற்றி மாற்றுப் பயிர் சாகுபடிக்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதில், 12 ஏக்கரில் இருந்த 850 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. மேலும், 3 ஏக்கரில் மரங்கள் வெட்டும் பணி நடந்து வருகிறது.

இது தொடர்பாக அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் மா மரங்களைப் பராமரிக்க குறைந்தது ரூ.4 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், பூச்சித் தாக்குதலால் மகசூல் பாதிக்கப்படுகிறது. தரமில்லாத பூச்சி மருந்துகள் அதிகம் விற்பனைக்கு வருகிறது. மேலும், உரிய விலையும் கிடைப்பதில்லை. தொடர் வருவாய் இழப்பு காரணமாக மா மரங்களை வேதனையுடன் அகற்றி உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

இழப்பீடு வழங்க கோரிக்கை: மா விவசாயிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் சவுந்தரராஜன், சிவகுரு ஆகியோர் கூறியதாவது: ஆண்டு முழுவதும் மா மரங்களை பராமரித்து, பருவ காலங்களில் கிடைக்கும் வருவாய் மூலம் விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான செலவுகளை மேற்கொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக வறட்சி, மழையின்மை, கரோனா ஊரடங்கு, போதிய விலையின்மை உள்ளிட்ட காரணங்களால் மா விவசாயிகள் வருவாய் இழந்து, பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.

மா மரங்களையும், விவசாயிகளையும் பாதுகாக்க அரசு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் ஆலோசனைகள் வழங்கி, மா சாகுபடிக்குப் புத்துயிர் அளித்துப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

100 ஆண்டு ஆயுள்: இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் பூவதி கூறும்போது, “மா மரங்களை பொறுத்தவரை மண் வளம் மற்றும் பராமரிப்பை பொறுத்து மரத்தின் ஆயுட் காலம் 100 ஆண்டுகள் வரை இருக்கும். மரக்கன்று நடப்பட்டு 15-வது ஆண்டு முதல் 45-வது ஆண்டு வரை நல்ல மகசூல் கிடைக்கும். தற்போதைய பூச்சித் தாக்குதல் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்