பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ் ரயில் சேவை: தெற்கு ரயில்வேக்கு ரூ.13.70 கோடி வருவாய்

By செய்திப்பிரிவு

சென்னை: பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், 16 தனியார் ரயில் சேவைகள் மூலமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.13.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இந்தியாவின் உயர்ந்த கலாச்சாரம் மற்றும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களை மக்கள் கண்டுகளிக்கும் வகையில், ‘பாரத் கவுரவ்’ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே 2021-ம் ஆண்டு நவம்பர் 23-ம்தேதி அறிமுகப்படுத்தியது. இந்தத்திட்டத்தில் ரயில்களை இயக்குவது மட்டுமே ரயில்வே நிர்வாகத்தின் பொறுப்பு. மற்ற சேவைகளை தனியார் நிறுவனங்கள் கவனிப்பார்கள்.

பாரத் கவுரவ் திட்டத்தில் ரயில்களை இயக்க எம் அண்ட் சி நிறுவனம், டிராவல் டைம்ஸ் நிறுவனம், எஸ்.ஆர்.எம்.பி.ஆர். நிறுவனம் உட்பட 8-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. சில நிறுவனங்கள் தனியார் ரயில் சேவையை அளிக்கும் பணியைத் தொடங்கிவிட்டன. தெற்கு ரயில்வேயில் முதல் ரயில் சேவை கோயம்புத்தூர்-ஷீரடிக்கு இயக்கப்பட்டது. இதன்பிறகு, வெவ்வேறு நகரங்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன.

தற்போது, கோடைக்கால சிறப்புச் சுற்றுலா ரயில்களை இயக்குவதற்கு தனியார் நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. இந்நிலையில், பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், 16 தனியார் ரயில் சேவைகள் மூலமாக, தெற்கு ரயில்வேக்கு ரூ.13.70 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கோயம்புத்தூர்-ஷீரடிக்கு முதல் ரயில் சேவை கடந்த ஆண்டு ஜூனில் தொடங்கியது. இதுவரை 16 ரயில் சேவைகள்வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம், ரயில்வேக்கு கணிசமாக வருவாய் கிடைத்துள்ளது. எத்தனை பெட்டிகள் பயன்படுத்துகிறார்கள், எத்தனை கிலோ மீட்டர் இயக்கப்படுகிறது, நாள் ஒன்றுக்குக் கட்டணம் எவ்வளவு போன்ற பல்வேறு பிரிவுகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

பாரத் கவுரவ் திட்டத்தின் கீழ், ரயில்களை இயக்க சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் ஆர்வமாக இருக்கின்றனர். அனுபவம் வாய்ந்த சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு மட்டுமே அனுமதி கொடுக்கிறோம். பாதுகாப்பு வைப்புத் தொகையாக ரூ.1 கோடி செலுத்த வேண்டும். அதன்பிறகு, செயல்பாட்டுக் கட்டணம் செலுத்தவேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE