முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு - ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட வேண்டாம்: தமிழக அரசுக்கு உளவுத் துறை அறிக்கை

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட்டால் திரையரங்குகள் முன்பு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே, இப்படத்தை திரையிட வேண்டாம் என்று அரசிடம் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

சுதிப்டோ சென் இயக்கியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வரும் 5-ம் தேதி (நாளை) இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. மத மாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் முன்னோட்டக் காட்சி சமீபத்தில் வெளியானது. கேரளாவை சேர்ந்த இந்து,கிறிஸ்தவ இளம்பெண்கள் 32ஆயிரம் பேர் மதமாற்றம் செய்யப்பட்டு, ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர்க்கப்பட்டதாக, அதில் காட்சி இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டது.

இந்த படத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், தணிக்கையின்போது, சர்ச்சைக்குரிய 10 காட்சிகள் நீக்கப்பட்டு, ‘ஏ’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, இப்படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, திட்டமிட்டபடி திரைப்படத்தை தமிழ், மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய 4 மொழிகளில் நாளை திரையிடுவதற்கான ஏற்பாடுகளை தயாரிப்பு நிறுவனம் செய்துள்ளது.

ஆனால், இப்படத்தை கேரளாவில் திரையிடக் கூடாது என்று அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இப்படம் திரைக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்று கேரள அரசு கருதுகிறது. எனவே, இப்படம் அங்கு வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தை திரையிட்டால் தமிழகத்திலும் அசம்பாவிதங்கள் அரங்கேற வாய்ப்புஉள்ளதாக அரசுக்கு மாநில உளவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘தமிழகத்தில் இப்படத்தை திரையிட்டால், திரையரங்குகள் முன்பு முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளது.

இப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் மனுகொடுத்திருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் உளவுத் துறை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE