ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த 30 பேர் கைது

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த 30 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை கடந்த 5 ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அறிவுரை வழங்கியது. இது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிமன்றம் தள்ளி வைத்தது. வேதாந்தா மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்
தில் இன்று (மே 4) மீண்டும் நடைபெறவுள்ளது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் நேற்று முன்தினம் ‘ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கக் கூடாது' என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 98 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற அறிவுரைப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் உள்ளிட்ட கழிவுகளை அகற்றவும், பசுமை வளாகத்தை பராமரிக்கவும் அனுமதி அளிக்கக் கோரியும், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரியும் ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் மற்றும் பல்வேறு கிராம மக்கள் நேற்று (மே 3) தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப் போவதாக அறிவித்திருந்தனர்.

காவல் துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில், மனு கொடுக்கும் நிகழ்ச்சியை ரத்து செய்வதாக ஸ்டெர்லைட் ஆதரவாளர்கள் அறிவித்தனர். ஆனால், தூத்துக்குடி அய்யனடைப்பு, லூர்தம்மாள்புரம், மேட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கெனவே அறிவித்தவாறு மனு அளிக்க ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் 30 பேரை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து அய்யனடைப்பு, கணபதி நகர் பகுதியில் கிராம மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஸ்டெர்லைட் வழக்கு இன்று (மே 4) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து வருவதால், போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE