வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: வங்கக் கடலில் வரும் 7-ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, 9-ம்தேதி புயலாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் வரும் 6-ம் தேதி வளிமண்டலத்தில் காற்றுசுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, 8-ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன் பிறகு 9-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து மத்திய வங்கக்கடல் நோக்கி வடக்கு திசையில் நகரக்கூடும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு உள்ளதா என்பதுகுறித்து வரும் நாட்களில் தெரிவிக்கப்படும். தற்போது தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. வட
தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 4, 5 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், 6, 7 தேதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

வரும் 5, 6, 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 7 டிகிரி ஃபாரன்வீட் வரை உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

3-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்கோனாவில் 11 செமீ, தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர், கழுகுமலை ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ., ஈரோடு மாவட்டம் தாளவாடி, தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி, திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி ஆகிய இடங்களில் தலா 9 செமீ மழை பதிவானது.

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்: சித்திரை தொடங்கியது முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடும் வெப்பம் வாட்டி வந்தது. ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 106 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு மேல் வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்த்து வந்தனர். இதனிடையே, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் சற்று தணிந்துள்ளது.

இந்நிலையில், அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இன்று தொடங்குகிறது. இது வரும் 29-ம் தேதி நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கக்கூடும். எனினும், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெறும் என்பதால் இந்த முறை அக்னி நட்சத்திர காலத்தில் வெப்பநிலை கடுமையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE