தஞ்சாவூரில் கொட்டித் தீர்த்த பலத்த மழை: போக்குவரத்து பாதிப்பு

By சி.எஸ். ஆறுமுகம்

தஞ்சாவூரில் மதியம் முதல் பெய்து வரும் பலத்த மழையினால் கீழ் பாலத்தில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு மதுக்கூர் 34 மிமீ, ஈச்சன்விடுதி 15.2மிமீ, பட்டுக்கோட்டை 7மிமீ, தஞ்சாவூர் 5மிமீ, பேராவூரணி 2மிமீ, அதிராம்பட்டினம் 1.6 மிமீ, திருக்காட்டுப்பள்ளி 1.2 மிமீ, கும்பகோணம், அணைக்கரை தலா 1மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மதியம் 2 மணி முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியது. இதேபோல, தஞ்சாவூர் ரயிலடி அருகேயுள்ள கீழ் பாலத்தில் பலத்த மழையின்போது மாலை 4 மணியளவில் தண்ணீர் தேங்கிய நிலையில், வடிந்து செல்வதற்கான மின் மோட்டார் இயங்காததால், சுமார் 4 அடி உயரத்துக்குத் தண்ணீர் தேங்கியதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் துரை. மதிவாணன் கூறியது,இந்தக் கீழ் பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வருகின்றனர். இப்பாலத்தில் பலத்த மழை பெய்யும்போது, தண்ணீர் தேங்கி வெளியேற முடியாமலும், வடிகால் வசதி இல்லாமலும் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அங்குள்ள தண்ணீரை வெளியேறுவதற்கு வடிகாலும், ராட்சத மோட்டாரும் அமைக்கப்பட்டன. ஆனால் நிரந்தரமாக தீர்வு காண்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 1000 கோடிக்கு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்பாலத்தில் தேங்கும் மழை நீரை வெளியேறுவதற்கு எந்தவித நடவடிக்கை செய்யப்படவில்லை.

இதனால் ரயிலடி, கான்வென்ட், ராமநாதன் வழியாகச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இனி வரும் நாட்களில் இதுபோன்ற நிலை ஏற்படுவதைத் தவிர்க்க மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நிரந்தர தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE