சென்னையில் ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ தொடக்கம்: பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற மேயர் பிரியா

By கண்ணன் ஜீவானந்தம்

சென்னை: மக்களைத் தேடி மேயர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மேயர் பிரியா மனுக்களை பெற்றார்.

சென்னை மாநகராட்சி 2023 – 24ம் பட்ஜெட் கூட்டத் தொடரில், ‘மக்களைத் தேடி மேயர் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மேயர் பிரியா அறிவித்தார். அந்தத் திட்டத்தை உடனடியாக அமலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி, மக்களை தேடி மேயர் திட்டத்தின் முதல் குறைதீர்வு கூட்டம் சென்னை ராயபுரத்தில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.

புகார் தெரிவிக்க வரும் பொது மக்கள், தங்களது பெயரை பதிவு செய்து ரசீது பெற்று கொண்ட பின்னர் மேயரை சந்திக்கவும், புகாரினை மாநகராட்சி பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. மக்களை தேடி மேயர் திட்டத்தின் வாயிலாக பொதுமக்கள் தங்கள் பகுதி சார்ந்த அடிப்படை பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு தேவையான உதவிகளை குறித்தும் மனுவாக வழங்கலாம். மாநகராட்சி தொடர்பான உதவிகள், மற்றும் புகார்களை மாநகராட்சி ஏற்றுக்கொள்ளும், மாநகராட்சி தொடர்பில்லாத மற்ற துறை புகார்கள் உரிய துறைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த சிறப்பு முகாமில், மேயர் பிரியா ராஜன் அமைச்சர் சேகர்பாபு, சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சியின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த மேயர் பிரியா, "சென்னை மாநகராட்சி நடப்பு நிதியாண்டில் மக்களை தேடி மேயர் திட்டம் அறிவிக்கப்பட்டது. தன்படி மண்டலம் ஐந்தில் மக்களை தேடி திட்டம் நடைபெற்று வருகிறது.

கோரிக்கைகளை மக்கள் நேரிடையாக வழங்கலாம். மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். மனு பெறப்பட்டதற்கான ரசீது வழங்கப்படும். சென்னை மாநகராட்சி வலைதளத்தில் அவர்கள் கொடுத்துள்ள மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிந்துகொள்ளலாம். மனுவின் நிலை மற்றும் அது எந்த அதிகாரியின் நடவடிக்கைக்கு கீழ் உள்ளது என்பதை அறிந்துகொண்டு அலுவலரை தொடர்பு கொள்ளவும் முடியும். இந்த திட்டம் 15 நாட்களுக்கு ஒரு முறை என அனைத்து மண்டலங்களிலும் செயல்படுத்தப்படும். மனுக்களை பெறுவது மட்டுமின்றி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட வேண்டும் என்பதனால் 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, "15 நாட்களுக்கு ஒரு முறை என்பது அதிக இடைவெளியாக தோன்றும் பட்சத்தில் அதனை குறைக்க மேயர் உள்ளிட்டவர்கள் கலந்தாலோசித்து முடிவெடுப்பார்கள். மக்களுக்காக களத்தில் இறங்கி பணியாற்ற மேயர் துடிப்புடன் தயராக உள்ளார்.

சென்னை மாநகராட்சியில் இடியும் நிலையில் உள்ள கட்டடங்களை இடித்து அகற்ற உத்திரவிடப்பட்டும். அந்த பணியை உரிமையாளர்கள் முடிக்காத நிலையில், அதன் அருகில் யாரும் செல்லாத வகையில் மாநகராட்சி தடுப்புகள் அமைத்ததால் தான் கட்டட இடிந்து விழும்போது உயிர் சேதம் தவிர்க்கப்படுகிறது.

சட்ட, விதி மீறல் இருந்தால் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கைகள் இந்த அரசில் எடுக்கப்பட்டு வருகிறது. உப்பு சாப்பிட்டவர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவர்கள் தண்டனை பெற வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார். ஒரு குற்ற வழக்கில் எடுத்தவுடன் நீதிமன்றம் செல்ல முடியாது. முறையாக விசாரணை நடைபெற்று வருகிறது" என்று அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE