சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணைக்கு ஏற்பு: தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன?- ஓர் அலசல்

By மு.அப்துல் முத்தலீஃப்

சட்டப்பேரவை சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை வரும் அக்டோபர் 2-வது வாரம் முதல் விசாரிக்க உள்ளது.

ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் பெண் எம்.எல்.ஏ தொடுத்த வழக்கில் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து எழுப்பிய கேள்விக்கு வழக்கை கையிலெடுத்த உச்ச நீதிமன்றம் அக்டோபபர் 2-ம் வாரம் முதல், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.

சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்து உச்ச நீதிமன்றம் வழக்கை கையிலெடுத்ததால் தமிழகத்தில் நடக்கும் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கின் நிலை என்ன என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது.

இந்தியா முழுதும் மாநில சட்டப்பேரவை தலைவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்த வழக்குகள் அவ்வப்போது நீதிமன்ற கதவை தட்டுகின்றன. இதில் வெவ்வேறு வகையான தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

இவற்றில் எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் குறித்த வழக்குகளே முக்கியத்துவம் பெறுகின்றன. சட்டப்பேரவையில் ஒரு அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் போது ஏற்படும் பிரச்சனையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவு சர்ச்சைக்குள்ளாகிறது.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உதவும் வகையில் சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் நீதிமன்ற கதவை தட்டும் போது நீதிமன்றம் சபாநாயகரின் அதிகார வரம்பு குறித்த சந்தேகத்தை எழுப்புகிறது.

நீதித்துறை போன்றே சபாநாயகருக்கும் வானளாவிய அதிகாரம் உள்ளதால் சபாநாயகரின் முடிவில் எந்த அளவுக்கு நீதித்துறை தலையிட முடியும் என்ற குழப்பம் பல்வேறு மாநிலங்களில் அடிக்கடி ஏற்படுகிறது.

சபாநாயகர்கள் எடுக்கும் முடிவுகளால் பிரச்சனை ஏற்பட்டு நீதிமன்றத்தை அதிகமாக நாடுவது வடகிழக்கு மாநிலங்களாகவே உள்ளன.

தமிழகத்தில் 1988-ம் ஆண்டும், 1994-ம் ஆண்டும் சபாநாயகரின் தீர்ப்பு பிரச்சனையாக மாறியது. அதன் பின்னர் தற்போது 18 எம்.எல்.ஏக்கள் இடை நீக்கம் விவகாரம் நீதிமன்ற முடிவை நோக்கி சென்றுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர் , மறுப்பவர் இரண்டு பக்கமும் உச்ச நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மோதுகின்றனர்.

சபாநாயகரின் உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்தாலும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்க மறுத்துவிட்டது.

மாநிலத்திற்கு மாநிலம் சபாநாயகர்களின் தீர்ப்புக்கு எதிராகவும் ஆதரவாகவும் நீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளன. 2011 ஆம் ஆண்டு எடியூரப்பா வழக்கில் சபாநாயகரின் உத்தரவை நீதிமன்றம் ஏற்கமறுத்து ரத்து செய்தது.

ஆனால் 2016 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநில சபாநாயகரின் தீர்ப்புக்கு உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் தடை விதிக்க மறுத்துவிட்டன. தற்போது 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க விவகாரம் கர்நாடக அரசின் தீர்ப்பின் அடிப்படையில் அணுக வேண்டும் என சிலரும், உத்தரகாண்ட் தீர்ப்பின் அடிப்படையில் தான் அணுக வேண்டும் என்று சிலரும் வாதிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆந்திர எம்.எல்.ஏ ஒருவர், சபாநாயகர் அதிகார வரம்பு குறித்து தொடுத்த வழக்கை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு உச்ச நீதிமன்றம் கையில் எடுத்துள்ளது.

இந்த வழக்கில் சபாநாயகரின் அதிகாரம் குறித்தும் எந்த அளவுக்கு சபாநாயகரின் அதிகார வரம்பிற்குள் நீதிமன்றம் செல்லலாம் என்பது குறித்தும் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.

சபாநாயகர் எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு அவர்களுக்கு பதிலளிக்க கொடுக்கப்படும் கால அவகாசம், அதில் இடைப்பட்ட காலத்தில் முடிவெடுத்தால் விதிமீறல் உள்ளதா போன்ற விவகாரங்களை பற்றி அமர்வு விசாரிக்கும். சபாநாயகர்களின் வானளாவிய அதிகாரங்கள் குறித்தும் கேள்விகள் வைக்கப்பட உள்ளன.

இந்த அமர்வுக்கும் தமிழக எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்குக்கும் சம்பந்தம் உள்ளதா என கேட்டபோது தகுதி நீக்க வழக்கு தனியாக நடக்கும். இது அரசியல் சாசன அமர்வு விசாரணை மட்டுமே, இதற்கும் தமிழக அரசின் வழக்குக்கும் சம்பந்தமில்லை.

மேலும் உச்ச நீதிமன்ற வழக்கு நடக்கும் காலகட்டத்தில் பழைய முறைகளே நடைமுறையில் இருக்கும். ஆகவே இது தமிழகத்தின் 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் எந்த விளைவையும் ஏற்படுத்தாது என்று டெல்லி உச்ச நீதிமன்ற சட்ட ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல் அமர்வு விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு அளிக்கும் பட்சத்தில் அந்த தீர்ப்பின் அடிப்படையில் அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்