இளம் தம்பதியர் எதிர்பார்ப்பதுபோல ‘இன்ஸ்டன்ட்’ விவாகரத்து சாத்தியமா? - உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் விளக்கம்

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: நவீன யுகத்தில், உணவு தயாரிப்பு முதல் உடல் எடையை குறைப்பது வரை எல்லாம் துரிதமாக நடந்துவிட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். விவாகரத்தையும்தான். இளம் தம்பதியர் தங்களுக்குள் சின்னச் சின்ன சண்டை ஏற்பட்டால் கூட, பரஸ்பர புரிதலுக்கான முயற்சியில் இறங்காமல், எடுத்த மாத்திரத்திலேயே விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறி விடுகின்றனர்.

அதற்கான வசதிகள், கட்டமைப்புக்கும் பஞ்சமில்லை. 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்ட நகரங்களில் குடும்ப நல நீதிமன்றங்கள் நிறுவப்பட வேண்டும் என சட்டம் சொல்கிறது. அதன்படி, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்கள் உட்பட நாடு முழுவதும் 763 குடும்ப நல நீதிமன்றங்கள் உள்ளன.

தலைநகர் சென்னையில் மட்டும் 8 நீதிமன்றங்கள் உள்ளன. இந்த நீதிமன்றங்களில் ஆயிரக்கணக்கான விவாகரத்து வழக்குகள் ஆண்டுக்கணக்கில் நிலுவையில் இருந்து வருகின்றன.

இந்த நிலை மாறி, ‘இன்ஸ்டன்ட் விவாகரத்து’ என்பதே இளம் தம்பதியர் பலரது எதிர்பார்ப்பாக உள்ளது. இதற்கு சட்டத்தில் வழி உள்ளதா? இதுகுறித்து சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்கறிஞர்கள் தெரிவித்ததாவது:

வழக்கறிஞர் எஸ்.அருணா: பொதுவாக கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பரஸ்பர விவாகரத்து கோரும் வழக்குகளில், இப்போது 6 மாதங்கள் பிரிந்து இருந்தாலே போதும், சட்டரீதியாக விவாகரத்து கிடைத்துவிடும். ஆனால், வழக்கு தொடரும் அனைவருக்கும் இந்த காலகட்டத்துக்குள் விவாகரத்து கிடைப்பது இல்லை. இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரவில்லை என்றால், எதிர்மனுதாரர் பதில் மனுதாக்கல் செய்ய 90 நாட்கள் அவகாசம் தரப்பட வேண்டும். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், எதிர் மனுதாரர் 90 நாட்களுக்குள் பதில்மனு தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்றமே தாமாக தலையிட்டு வழக்கை ஒரு முடிவுக்கு கொண்டுவர முடியும்.

ஆனால் அதுபோல சட்டரீதியாக எந்தவொரு குடும்ப நல நீதிமன்றமும் எடுத்தோம், கவிழ்த்தோம் என செயல்படாது. ஏனென்றால், குடும்ப நல நீதிமன்றங்களின் நோக்கமே குடும்ப நலனை காப்பதுதானே தவிர, குடும்பத்தை பிரித்து வைப்பது அல்ல. அதற்காகத்தான் காத்திருப்பு காலகட்டத்தில் குடும்ப நல ஆலோசகர்கள், உளவியலாளர்கள் மூலம் தம்பதியருக்கு கவுன்சலிங் தரப்படுகிறது. அதிலும் அவர்கள் இடையே சுமுக நிலை ஏற்படாவிட்டால், கடைசியாகத்தான் விவாகரத்து வழங்கப்படுகிறது.

ஏற்கெனவே ஓராண்டாக இருந்த ‘கூலிங் பீரியட்’ எனப்படும் காத்திருப்பு காலகட்டம் தற்போது 6 மாதமாக குறைக்கப்பட்டு விட்டது. பரஸ்பர விவாகரத்து கோரும் நபர்கள், ‘ஏற்கெனவே எங்களுக்குள் பலமுறை பேசிவிட்டோம். இனியும் காத்திருந்துஎந்த பயனும் ஏற்படாது’ என்று கருதினால், ‘‘உடனடி விவாகரத்து தேவை’’ என்று கூறி, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் 30 நாட்களுக்குள்கூட சட்டரீதியாக ‘இன்ஸ்டன்ட் விவாகரத்து’ பெற முடியும்.

வழக்கறிஞர் ஏ.சுமனா ஜீவானந்தம்: இன்றைய இளம் தம்பதியரிடம் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையோ, குடும்ப சூழலை அனுசரித்து செல்லும் பொறுமையோ இல்லை. இப்போதெல்லாம் கணவன் - மனைவி ஒற்றுமையாக சந்தோஷத்துடன் 10 ஆண்டுகள் வாழ்ந்தாலே பெரிய சாதனையாக பார்க்க வேண்டியுள்ளது. அந்த அளவுக்கு குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை பெருகி வருகிறது. இதில் 70 சதவீதம் பேர் இளம்பெண்கள் என்பது வேதனை.

சென்னையில் மட்டுமே 8 குடும்பநல நீதிமன்றங்கள் வழக்குகளை விசாரித்தபோதும், சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. கணவன் - மனைவி இருவரும் சட்டரீதியாக பிரிவதற்கு, சட்டத்தில் சொல்லப்பட்டுள்ள சரியான, நியாயமான காரணங்கள் இருந்தால் மட்டுமே குடும்ப நல நீதிமன்றங்களும் விவாகரத்து அளிக்கும். பெண்களின் நலனை பாதுகாக்கும் நோக்கில் இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குடும்ப நல நீதிமன்ற நீதிபதிகளும் செயல்படுகின்றனர்.

ஏனென்றால், விவாகரத்தான இளம்பெண்கள் இந்த சமூகத்தில் எதிர்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் அதிகம். குழந்தைகள் உள்ள தம்பதியர் என்றால் இன்னும் அதிகப்படியான பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும். கட்டாய கல்யாணம், மோசடி கல்யாணம் போன்ற காரணங்களால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு மணமுறிவு ஏற்படும் இளம் தம்பதியர் தங்களது அடுத்தகட்ட நகர்வை நோக்கி செல்ல, எதிர்கால வாழ்வை திட்டமிட விவாகரத்து என்பது அவசியமாகி விடுகிறது.

அதேநேரம், ‘இன்று திருமணம், நாளை விவாகரத்து, நாளை மறுநாள் பிரிந்து விட்டோம்’ என்ற மேலை நாட்டு கலாச்சாரம் நம்மிடம் இல்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் மற்ற சிவில், கிரிமினல் வழக்குகள்போல, விவாகரத்து வழக்குகளை அவசரகதியில் விசாரிக்காமல் குடும்ப நல நீதிமன்றங்கள் சமூக பொறுப்புடன் கையாண்டு வருகின்றன. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்