அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் - பாலகிருஷ்ணன் பேட்டி

By இ.மணிகண்டன்

விருதுநகர்: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதமே வந்தாலும் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெற்றி பெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு விருதுநகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் இன்று காலை கட்சிக் கொடியை ஏற்றிவைத்து மே தின உரையாற்றினார். மாவட்டச் செயலர் அர்ஜுணன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து அவர் அளித்த பேட்டியில், "தமிழகம் முழுவதும் உள்ள உழைப்பாளர்கள் தங்கள் கருத்தாலும் கரத்தாலும் உழைக்கின்றனர்.
அவர்களுக்கு உழைப்பாளர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழிலாளிலாளர்கள் பல போராட்டங்களைக் கடந்து பல உரிமைகளை இன்று அனுபவிக்கிறோம். இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் தான் மே தினம், 1923ம் ஆண்டு சிங்கார வேலரால் கொண்டாடப்பட்டது. அதன் 100வது ஆண்டை கொண்டாடும் இந்த வேளையில், சாதியாலும் மதத்தாலும் மக்களை பிளவுபடுத்தி, மாபெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகிற பாஜக அரசை வீழ்த்த தொழிலாளர்கள் இந்நாளில் உறுதியேற்க வேண்டும். சமீபத்தில் சட்டமன்றத்தில் தொழிற்சாலை சட்டத் திருத்தம் வந்தபோது 12 மணிநேர வேலை என்பதை எதிர்த்து வெளிநடப்பு செய்ததோம்.

எதிர்ப்பு உணர்வை புரிந்து கொண்ட தமிழக முதல்வர் அந்த சட்டத்தை திரும்ப பெற்றிருக்கிறார். சமூகத்தில் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது. சாதிய ஏற்றத்தாழ்வு இன்றைக்கும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஒழித்து சமதர்ம சமுதாயத்தை எப்படி அமைக்க விரும்புகிறோமோ அதே போல் சாதிய ஏற்றத்தாழ்வு அனைத்தையும் ஒழித்து சமத்துவ வாழ்க்கையை அனைவருக்கும் உருவாக்குவதற்கு இந்த மே தின நன்னாளில் உறுதி ஏற்க வேண்டும். தமிழகத்தில் தானியங்கி மதுபான விற்பனை தேவையற்றது.

படிப்படியாக மது பழக்கத்தை குறைக்க அரசு தன்முனைப்போடு செயல்பட வேண்டும். எப்போது எம்.பி. தேர்தல் வந்தாலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி அதற்கு தயாராக இருக்கிறது. அடுத்த மாதமே தேர்தல் வந்தாலும் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றிபெறும். தமிழகத்தில் பாஜக வெற்றிபெற முடியாது. நாடு முழுவதும் பாஜகவின் தோல்வி கணக்கு எழுத ஆரம்பிக்கப்பட்டு விட்டது. பாஜகவில் உள்ளவர்கள் காங்கிரஸை நோக்கிச் செல்கிறார்கள். இனிமேல் பாஜகவுக்கு எந்த தேர்தலாக இருந்தாலும் தோல்வி முகம்தான்" என கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE