மதிமுகவை திமுகவோடு இணைக்கும் எண்ணம் இல்லை - வைகோ திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

சென்னை: மதிமுகவை திமுகவோடு இணைக்கும் எண்ணம் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மதிமுகவில் தற்போது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 70 சதவீத தேர்தல் முடிந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை நடத்திக்கொண்டிருக்கிறோம். சிறு சலசலப்பும் எங்கும் கிடையாது. விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட இருக்கிறது. மதிமுக தற்போது முக்கிய காலகட்டத்தில் இருக்கிறது. மதிமுகவை, திமுகவோடு இணைத்துவிட வேண்டும் என கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கூறி இருப்பது குறித்து கேட்கிறீர்கள்.

மதிமுகவை திமுகவோடு இணைக்கும் எண்ணம் இல்லை. அவருக்கு வேண்டுமானால், உள்நோக்கம் இருக்கலாம். மதிமுகவின் 99.90 சதவீத தொண்டர்களுக்கு அத்தகைய எண்ணம் இல்லை. கட்சியில் குழப்பம் இருப்பதுபோல சித்தரிக்க முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோற்றுப்போய்விட்டது. இதற்கு மேல் திருப்பூர் துரைசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு மதிமுக இன்னும் வேகமாக செயல்படும்" என தெரிவித்தார்.

முன்னதாக, தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21ம் தேதி நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் ( தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023, சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்ட அறிக்கையில், "உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாளில், தமிழ்நாடு முழுவதும் தொழிலாளர்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கியிருக்கின்ற தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலினுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக சட்டமன்றத்தில் ஏப்ரல் 21 ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட, தமிழ்நாடு சட்டமன்றம் தொழிற்சாலைகள் ( தமிழ்நாடு திருத்த) சட்டம் -2023, சட்ட முன்வரைவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத் தக்கதாகும்.

8 நேரம் வேலை என்பதை உலகத் தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி உயிர்ப்பலிகளைக் கொடுத்து பெற்ற உரிமையாகும். அதனைப் பாதுகாக்கும் வகையில், திராவிட மாடல் அரசு தொழிலாளர்களுக்கு என்றும் துணையாக இருக்கும் என்பதை முதலமைச்சர் பிரகடனப்படுத்தியிருக்கிறார்.

இந்தியாவிலேயே முதன் முதலில் மே தினத்தை 1923 ஆம் ஆண்டு சென்னையில் கொண்டாடியவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலனார். தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிராகச் செயல்பட்டு வரும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்கு தமிழ்நாட்டில் மே தினம் கொண்டாடப்பட்ட நூற்றாண்டு நிறைவில் உறுதி கொள்வோம்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, 12 மணி நேர வேலை தொடர்பான தொழிலாளர் சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். | வாசிக்க > 12 மணி நேர வேலை தொடர்பான தொழிலாளர் சட்ட முன்வடிவு திரும்பப் பெறப்பட்டுள்ளது: முதல்வர் ஸ்டாலின்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE