கட்டபொம்மனுக்கு தண்டனை அளித்த தகவலுடன் செப்பு பட்டயம்: எட்டயபுரம் கோயிலில் கண்டுபிடிப்பு

By செய்திப்பிரிவு

கோவில்பட்டி: வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு தண்டனை வழங்கிய தகவல் அடங்கிய செப்பு பட்டயத்தை தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள சுவடித் திட்டப் பணிக் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளையும், செப்பு பட்டயங்களையும் பராமரித்து, பாதுகாத்து, நூலாக்கம் செய்வதற்காக தமிழக அரசால் பேராசிரியர் சு.தாமரைப் பாண்டியன் தலைமையில் 12 பேர் அடங்கிய சுவடித் திட்டப் பணிக் குழுவினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழுவினர் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் எட்டீஸ்வரர் கோயிலில் செப்பு பட்டயம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.

கோயில் சுவரின் முன்பகுதியில் பதித்து வைக்கப்பட்டுள்ள அந்த செப்பு பட்டயத்தை ஆராய்ந்தபோது கிடைத்த தகவல் குறித்து சுவடித் திட்டப் பணிக்குழு தலைவர் கூறியதாவது: கட்டபொம்மனை கொலை செய்தது குறித்து கும்பினியர் (ஆங்கிலேயர்) விளம்பரம் செய்த வரலாற்று தகவல் இடம் பெற்றுள்ளது. இந்த செப்பு பட்டயத்தை வைத்தவர் கும்பினியரின் ராணுவ படைத் தளபதி மேஜர் பானர் மேன். 20-10-1799-ல் இந்த செப்பு பட்டயம் எழுதப்பட்டுள்ளது.

அதில், ‘கும்பினியார் உத்தரவுப்படி திருநெல்வேலி சீமைகளில் எனது பாளையத்தை இறக்க வேண்டிய சூழல் உருவானது. பாஞ்சாலங்குறிச்சியான், ஏழாயிரம் பண்ணையான், நாகலாபுரத்தாள், கோலார்பட்டியான், காடல்குடி குளத்தூரான் கும்பினியாரிடமிருந்து தப்பித்து துர்மார்க்க நடத்தைகளில் நடந்ததால், இவர்களின் பாளையப்பட்டுகளை கும்பினியார் வசம் சேர்த்துக்கொள்ளும் சூழல் உருவானது.

பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்ம நாயக்கர், அவருடைய தானாதிபதி சிவசுப்பிரமணிய பிள்ளை, நாகலாபுரத்து பாளையக்காரருக்கு தமையனும் காரியஸ்தனுமான சவுந்தர பாண்டிய நாயக்கர் ஆகியோருக்கு உயிர்ச்சேதம் ஏற்படும் வண்ணம் தண்டனை வழங்கப்பட்டது.

நாகலாபுரம், ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களையும், சில முக்கியமான மனிதர்களையும் அவரவர் பாளையப்பட்டுகளில் இருந்து நீக்கி சென்னை பட்டணத்துக்கு அனுப்பும்படியான சூழலும் உண்டானது.

இந்த பாளையப்பட்டுகளில் உள்ள கோட்டைகளை எல்லாம் இடித்து, அதில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், குடியானவர் கைகளில் உள்ள ஆயுதங்களை பறிமுதல் செய்யும் சூழலும் உண்டானது. இதுகுறித்து முன்பே விளம்பரம் செய்து சனங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மேலும்,மேஜர் பானர் மேன் துரையவர்கள் நிமித்தமாக இன்னுஞ் சில காரியங்கள் இந்த விளம்பரம் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.

அதாவது, இனிமேல் எந்த பாளையக்காரனும் கோட்டை கொத்தளங்கள் போட்டாலும், பீரங்கிகள், ரேக்குலா வெடிமருந்துகள் வைத்திருந்தாலும், இத்தியாதிகளைச் சம்பாதித்தாலும் அவர்கள் கும்பினியாருடைய ஆதரவுகளை இழப்பர். அவர்களின் பாளையப்பட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு தோணியபடி தண்டிக்கப்படுவர்.

பாளையப்பட்டுகளில் உள்ள சேர்வைக்காரர், சேவகர், காவல்காரர், குடியானவர் முதலியோர் துப்பாக்கி, வெடி, ஈட்டி, வல்லயம் பிடித்திருந்தாலும் அல்லது வைத்திருந்தாலும் உயிர்ச்சேதம் செய்யப்படுவர். பாளையப்பட்டுகளின் குடியானவர்களுடைய நடத்தைகளுக்கு அந்தந்த பாளையக்காரர்களே பொறுப்பு. அதை மீறி எந்த பாளையக்காரர்களின் சனங்களாலும் தொந்தரவுகள் இருந்தால் அவர்களுக்கு உயிர்ச்சேதம் அடையும் தண்டனை வழங்கப்படும். மேலும், பாளையங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பாளையக்காரரும் தோணின படி தண்டிக்கப்படுவார்.

சீமைக்கு நலம் ஏற்படும் வண்ணம் மேலே எழுதப்பட்டிருக்கக் கூடிய சட்டங்களைச் சகல சனங்களும் இனிமேல் என்றென்றும் அறிந்து மனதில் வைத்து நடக்க வேண்டும் என்பதற்காக இந்த விளம்பரம் செப்புத் தகட்டிலே எழுதப்பட்டு அந்தந்த பாளையப்பட்டுகளின் தலைமையான கிராமங்களில் பிரபலமான இடங்களில் அடித்து வைக்க உத்தரவிடப்படுகிறது.

இப்படிக்கு மேஜர் பானர் மேன்’ என்ற வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. இச்செப்பேடு வழியாக ஆங்கிலேயரை எதிர்த்த பாளையக்காரர்கள் அழித்து ஒழிக்கப்பட்ட வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்