''அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது'' - ஹெச்.ராஜா வலியுறுத்தல்

By ஆ.நல்லசிவன்

பழநி: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதவியை பறிக்கக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் தமிழ்நாடு பிரமாண ஸமாஜம் சார்பில் நடைபெற்ற பிராமண குடும்ப ஸ்ம்மேளன நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ''கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 130 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, திமுகவைச் சேர்ந்த 16 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இந்த சொத்து எங்கிருந்து வந்தது என்பதில் தான் ஊழல் உள்ளது.

குறிப்பாக, ஜி ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக சர்ச்சை எழுந்தபோது, அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றார் மு.க.ஸ்டாலின். தற்போது ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் 142 மணி நேரம் வருமான வரித்துறை சோதனை நடந்துள்ளது. ஆனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வருமான வரித்துறை சோதனை நடத்தி எங்களை மிரட்ட முடியாது என்கிறார். ஊழல் செய்பவர்கள் தமிழக அமைச்சரவையில் இருக்க முடியாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினால் திமுக அமைச்சர்களே இருக்க முடியாது. புதிதாக அமைச்சர் ஆனவர்களிடமும் ஊழல் உள்ளது.

கடந்த 1976-ல் எப்படி ஊழலால் திமுக அரசு போனதோ, அதேபோன்று இந்த முறையும் திமுக அரசு ஊழலால் போகும். பொது இடத்தில் ஏடிஎம் இயந்திரம் போல் மதுபானம் விற்பனை செய்யும் இயந்திரத்தை திமுக அரசு வைத்துள்ளது. 34 ஆண்டுகள் மது என்றால் என்னவென்று தெரியாமல் இருந்த தமிழர்களை, 1971 ஆகஸ்ட் 31-ல் சாராயக் கடைகளை திறந்து விட்டு குடிமகன்களாக மாற்றியதும், தமிழர்களின் குடியைக் கெடுத்ததும் தான் திராவிட மாடல். இப்படி ஒரு மோசமான அரசு தமிழகத்தில் இருப்பது ஒவ்வொரு தமிழனுக்கும் மானக்கேடு.

அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் என்ன காரணத்துகாக ஆடியோ வெளியிட்டாரோ, அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் எடுத்தார் என்றால், பழனிவேல் தியாகராஜன் சொன்னது உண்மையாகும். உண்மையை சொன்னதற்காகவே பதவியில் இருந்து எடுத்ததாக கருதப்படும். எனவே, அவரை அமைச்சர் பதவியில் இருந்து எடுக்க கூடாது. துறையையும் மாற்றக் கூடாது,'' இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE