24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: அன்புமணி

By செய்திப்பிரிவு

சென்னை: பூதிநத்தம் கிராமத்தில் மது விற்பனைக்கு எதிராக பெண்கள் பொங்கியெழுந்துள்ள நிலையில் 24 மணி நேர சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது: ''தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த பூதிநத்தம் கிராமத்தில் 24 மணி நேரமும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த ஜெயராமன் என்பவரின் வீட்டுக்குள் புகுந்த அந்த ஊரைச் சேர்ந்த பெண்கள், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுப்புட்டிகளை உடைத்து தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். அவர்களின் போராட்ட வடிவம் சரியா? என்ற வினா ஒருபுறம் இருந்தாலும், அவர்களின் நோக்கமும், உணர்வும் பாராட்டத்தக்கவை. அவர்களை வணங்குகிறேன்.

பூதிநத்தம் பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுவதால், மாணவர்களும், சிறுவர்களும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளனர். சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும் ஏற்பட்டுள்ளன. ஆனால், அது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் ஏற்படாத நிலையில் தான் பெண்கள் பொங்கியெழுந்து போர்க்கோலம் பூண்டிருக்கின்றனர்.

பூதிநத்தம் கிராமத்தில் மட்டும் தான் இத்தகைய நிலை என்றில்லை. தமிழ்நாடு முழுவதும் இதே நிலை தான். மாநிலம் முழுவதும் சட்டப்பூர்வமாக 5,329 மதுக்கடைகள் உள்ளன என்றால், ஒவ்வொரு கடைக்கும் 5 முதல் 10 சந்துக் கடைகள் உள்ளன. அவற்றில் 24 மணி நேரமும் மது விற்பனை செய்யப்படுகிறது. அதனால் சட்டம் - ஒழுங்கு சிக்கல்களும், சில நேரங்களில் கொலைகளும் நிகழ்கின்றன. இதற்கு முடிவு கட்டப்பட வேண்டும்!

தமிழ்நாடு முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படும் சந்துக்கடைகளை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்தவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE