கர்நாடகாவில் காங்கிரஸ் 150 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றிபெறும்: ஜோதிமணி எம்.பி.

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவு அலை இருப்பதால் 150 இடங்களை கைப்பற்றி மாபெரும் வெற்றி பெறுவோம் என்று கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதியிழப்பு செய்யப்பட்டதை அடுத்து அவர் அரசு குடியிருப்பை காலி செய்தார். இது தொடர்பாக மத்திய அரசை கண்டித்து கரூர் மக்களவைத் தொகுதியில் 1 லட்சம் வீடுகளில் 'எனது வீடு ராகுல் வீடு' என ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட முத்தலாடம்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் ஜோதிமணி இன்று(ஏப். 30ம் தேதி) இதனை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கரூர் மாநகராட்சியில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. கரூர் மாநகராட்சியாக உயர்த்தப்பட்ட பிறகு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தைக் கொண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறோம். எனினும், மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்படும். அதன் மூலம் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்படும்.

கரூர் மாநகராட்சி முத்தலாடம்பட்டியில் 'எனது வீடு ராகுல் வீடு' எனும் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரத்தின்போது மூதாட்டியை நலம் விசாரிக்கும் கரூர் எம்.பி. ஜோதிமணி.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் கட்சி முழுவீச்சில் பணியாற்றி வருகிறது. தற்போதைய கர்நாடக அரசு, 40 சதவீத கமிஷன் பெறும் அரசாக உள்ளது. கர்நாடகாவில் ஊழலை தாங்கிக்கொள்ள முடியாமல் பல ஒப்பந்ததாரர்கள் தற்கொலை செய்துகொண்டனர். காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான அலை இருக்கிறது. 150 இடங்களை கைப்பற்றி கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெறும்.

கர்நாடக தேர்தலில் பாஜக பணத்தை கொட்டுகிறது. பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை கர்நாடகா முழுவதும் ஹெலிகாப்டரில் பயணித்து பணத்தை வாரி இறைத்து வருகிறார். கர்நாடகாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பாஜக அமைச்சர் ஒருவர் தமிழ்தாய் வாழ்த்துப் பாடலை பாதியில் நிறுத்திவிட்டு கன்னட கீதத்தை ஒலிக்கச் செய்கிறார். தமிழரான அண்ணாமலை அதை கண்டும் காணாமல் இருக்கிறார். இதுகுறித்து கேள்வி எழுப்பினால் அந்தப் பாடலில் மெட்டு சரியில்லை என்று காரணம் கூறுகிறார்'' என்றார். தொடர்ந்து காந்தி கிராமம், வெங்கமேடு ஆகிய பகுதிகளிலும் 'எனது வீடு ராகுல் வீடு' என்ற பிரச்சாரம் நடைபெற்றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE