திண்டுக்கல்லில் பட்டுக்கூடு விற்பனை அங்காடியை தொடங்க வேண்டும்: பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள்

By ஆ.நல்லசிவன்

திண்டுக்கல்: அதிக வெண்பட்டுக்கூடு உற்பத்தி நடக்கும் திண்டுக்கல் மாவட்டத்தில் பட்டுக்கூடு விற்பனை அங்காடியை தொடங்க வேண்டும் என்று பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம், பழநி ஆகிய பகுதிகளில் 4,000 ஏக்கரில் மல்பெரி சாகுபடியாகிறது. இப்பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் உள்ளன. வெண் பட்டுக்கூடு உற்பத்தியில் 2,500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டுதோறும் 20 டன்னுக்கும் அதிமாக பட்டுக்கூடுகள் உற்பத்தியாகின்றன. திண்டுக்கல்லில் பெயரளவில் மட்டுமே பட்டுக்கூடு விற்பனை அங்காடி உள்ளது. அதனால் இங்கு உற்பத்தியாகும் பட்டுக்கூடுகள் சிவகங்கை, ராமநாதபுரம் பட்டுக்கூடு அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதல் விலை கிடைப்பதால் பெரும்பாலானோர் கர்நாடக சந்தைக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர். இருந்தும் போக்குவரத்துச் செலவு, அலைச்சல் உள்ளிட்டவைகளால் பட்டுக்கூடு விவசாயிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தற்போது பட்டுக்கூடு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் விலையும் கடுமையாக சரிந்துள்ளது. ஒரு கிலோ பட்டுக்கூடு தமிழகத்தில் ரூ.400 முதல் ரூ.500 வரை மட்டுமே விற்பனையாகிறது.

ஆனால், கர்நாடக மாநிலத்தில் தமிழகத்தை விட, ரூ.100 வரை கூடுதலாக விலை போகிறது. தமிழகத்தில் இடைத்தரகர்களின் ஆதிக்கம், நூல் உற்பத்தி ஆலைகளில் சிண்டிகேட் காரணமாக தொடர்ந்து பட்டுக்கூடு விலை வீழ்ச்சியடைந்து வருகிறது. அதனால் பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

இது குறித்து பழநி பகுதியைச் சேர்ந்த பட்டுப்புழு வளர்ப்பு விவசாயி செல்வராஜ் கூறியதாவது: ''உரம் விலை, வேலையாட்கள் கூலி, பராமரிப்பு மற்றும் உற்பத்தி செலவு ஆகியவை அதிகரித்து வருகின்றன. ஆனால், பட்டுக்கூடுக்கு மட்டும் நிரந்தர விலை இல்லை. இதனால் பட்டு வளர்ப்பு விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பிற மாநிலங்களுக்கு இணையான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திண்டுக்கல்லில் பட்டுக்கூடு விற்பனை அங்காடியை தொடங்க வேண்டும்.

பட்டுக்கூடுக்கு நிரந்தரமான விலை கிடைக்க தருமபுரியைப் போல், அனைத்து மாவட்டங்களிலும் ஆன்லைன் ஏல முறையை தொடங்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறை மூலம் பட்டு வளர்ப்பு விவசாயிகளுக்கு செயல்படுத்தப்பட்ட காப்பீடு திட்டம் முடிவடைந்தும் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை. அரசு நூற்பாலைக்கு கொள்முதல் செய்யும் பட்டுக்கூடுவுக்கு காலதாமதமின்றி பணம் வழங்க வேண்டும். இதே போல் தமிழக பட்டுக்கூடு விற்பனை அங்காடியில் விற்பனை செய்யும் கூடுகளுக்கு உடனே பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE