எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்கள் திறப்பு: அமைச்சர், ஐகோர்ட் நீதிபதிகள் பங்கேற்பு 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 5 கூடுதல் நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா சனிக்கிழமை (ஏப்.29) திறந்து வைத்தார்.

சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காசோலை மோசடி வழக்குகளுக்கான இரண்டு கூடுதல் நீதிமன்றங்கள், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை வழக்குகளுக்கான ஒரு கூடுதல் நீதிமன்றம், சிறிய வழக்குகளுக்காக மெய்நிகர் முறையிலான ஒரு நடமாடும் நீதிமன்றம், ரயில்வே சட்ட வழக்குகளுக்கான ஒரு நடமாடும் நீதிமன்றம் என 5 கூடுதல் நீதிமன்றங்களை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று திறந்து வைத்தார்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ரகுபதி, "இந்திய ஒன்றியத்திலேயே அதிக நீதிமன்றங்களை திறக்க வேண்டுமென்ற முனைப்புடன் சென்னை உயர் நீதிமன்றம் செயல்படுகிறது. குற்றங்கள் அதிகரித்ததால்தான் அதிக நீதிமன்றங்கள் துவங்குவதாக எண்ண வேண்டாம். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையின் காரணமாகவே கூடுதல் நீதிமன்றங்கள் துவங்கப்படுகின்றன.ரூ.1,747 கோடி நீதித்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த ஆண்டைவிட இது 285 கோடி ரூபாய் அதிகம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்க நீதித்துறை கோரிக்கைகளை நிறைவேற்றும்படி முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்" என்று அவர் பேசினார்.

உயர் நீதிமன்ற நீதிபதி பரத சக்ரவர்த்தி பேசியபோது, "நாட்டிலேயே தமிழ்நாடு உள்பட மூன்று மாநிலங்களில் மட்டும் நிலுவையில் உள்ள உரிமையியல் வழக்குகளின் எண்ணிக்கையை விட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை குறைவு. அதற்கு குற்றவியல் வழக்குகளை விசாரிக்க நீதிமன்றங்கள் முக்கிய காரணம்" என்று தெரிவித்தார். இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசும்போது, "எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் முன்பிருந்த சூழ்நிலையில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.

பின்னர் பேசிய, உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, "கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்படும் போதெல்லாம், தமிழக அரசு மனப்பூர்வமாக ஏற்று உரிய வசதிகளை செய்து கொடுக்கிறது. வழக்குகள் அதிகரிக்க மக்கள் தொகை பெருக்கம் மட்டும் காரணம் அல்ல. பிரச்சினைகளும் புதிது புதிதாக உருவாவதுதான். மக்கள் மத்தியில் தார்மீக விழுமியங்கள் குறைந்ததே வழக்குகள் அதிகரிக்க காரணம்" என்று தெரிவித்தார்.

பின்னர் சிறப்புரை ஆற்றிய பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, "மெய்நிகர் நடமாடும் நீதிமன்றம் மூலம் வழக்குகளில் ஆஜராக நீதிமன்றம் வர தேவையில்லை. அனைவருக்கும் பிரச்சினைகள் இருப்பதால் அவற்றை தீர்க்கவே நீதிமன்றங்களை துவங்க வேண்டியுள்ளது.

புரட்சிகளில் இருந்துதான் அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் பெற்றுள்ளோம். தகவல் தொழில்நுட்ப துறையின் புரட்சிதான் காகிதமில்லா நீதி பரிபாலனத்துக்கு கொண்டு வந்துள்ளது. மின்னணு மனு தாக்கல் நடைமுறையில் தொடங்கி காணொலியில் வழக்குகளை விசாரிக்கும் நடைமுறை வரை தொழில்நுட்பமே காரணம். இளம் வழக்கறிஞர்கள் வாதங்களை சுருக்கமாகவும், விரைவாகவும் முன்வைக்க வேண்டும்" என்று அவர் அறிவுறுத்தி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருஷ்ணன் ராமசாமி, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.பரத சக்ரவர்த்தி, மாவட்ட முதன்மை எஸ்.அல்லி, சென்னை வணிக வழக்குகளுக்கான அமர்வு நீதிபதி எல்.எஸ்.சத்தியமூர்த்தி, தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, மாவட்ட ஆட்சியர் அமிர்த ஜோதி, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், எழும்பூர் வழக்கறிஞர் சங்க தலைவர் சந்தன்பாபு, செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE