கடலூர் மீனவர் கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள் தண்டனை: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு

By செய்திப்பிரிவு

விருத்தாசலம்: கடலூரில் மீனவர்கள் இடையே கடந்த 2018-ல் ஏற்பட்ட மோதலில், மீனவ பஞ்சாயத்து தலைவரும், அதிமுக பிரமுகருமான பஞ்சநாதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 10 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஞ்சிய 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

கடலூரில் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைகோரி, சிங்காரதோப்பு உள்ளிட்ட மீனவ கிராமங்கள் உள்ளன. சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக தேவனாம்பட்டினம் - கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்கள் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இந்த நிலையில், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே கடந்த 2018-ம் ஆண்டு பயங்கர மோதல் ஏற்பட்டது. கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் மீனவர்கள் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில், கடலூர் சோனாங்குப்பத்தை சேர்ந்த மீனவ பஞ்சாயத்து தலைவரும், அதிமுக பிரமுகருமான பஞ்சநாதன் என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக தேவனாம்பட்டினம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, 21 பேரை கைது செய்தனர். கடலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட தினகரன் என்பவர் உயிரிழந்ததால், எஞ்சிய 20 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, தேவனாம்பட்டினம், சோனாங்குப்பம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் உத்தரவின்பேரில் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

வழக்கை விசாரித்த கடலூர் முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் தீர்ப்பளித்தார்.

கடலூர் சோனாங்குப்பம் மீனவர் பஞ்சநாதன் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 20 பேரில், ஆறுமுகம், கந்தன், சுரேந்தர், ஓசை மணி, சரண்ராஜ், சுதாகர், சுப்பிரமணி, தென்னரசு, ஸ்டாலின், முத்துகுமார் ஆகிய 10 பேரும் குற்றவாளிகள் என அறிவித்து, அவர்கள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அவர்கள் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும், அபராதத்தை செலுத்த தவறினால், மேலும் ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த எஞ்சிய 10 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்