சாதியைச் சொல்லி மேயர் திட்டுவதாக தர்ணா: நெல்லையில் திமுக கவுன்சிலரின் போராட்டத்தால் பரபரப்பு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இருதரப்பாக மோதிக்கொண்ட நிலையில், தன்னை ஜாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டுவதால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக திமுக கவுன்சிலர் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

திருநெல்வேலி மாநகராட்சி 15-வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் அஜய். நேற்று நடந்த மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இடையே மோதலும், வாக்குவாதமும் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் கவுன்சிலர் அஜய், “எனது வார்டுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்துதரப்படவில்லை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவன் என்பதால் என்னையும், எனது வார்டையும் மேயர் புறக்கணித்து வருகிறார்” என்று தெரிவித்து, மேயர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

“மக்களுக்கு சேவை செய்யவே இந்தப் பதவிக்கு வந்தேன். தற்போது அது முடியாமல் போய்விட்டது. எனக்கு பதவி தேவையில்லை. திமுகவிலிருந்து என்னை நீக்கினாலும் பரவாயில்லை. நான் இதே இடத்தில் எனது வார்டு மக்களுக்காக உண்ணாவிரதம் இருப்பேன்.

ஜாதி பெயரைச் சொல்லி மேயர் திட்டுகிறார். மனு அளிக்கும்போது கை கட்டியபடி வர வேண்டும் என்கிறார். இவரிடம் கெஞ்சிக் கெஞ்சி மக்களுக்கு சேவை செய்ய முடியாது. எனது கையை அறுத்துக்கொண்டு இங்கேயே தற்கொலை செய்துகொள்வேன்” என்று தெரிவித்தார்.

மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் கே.ஆர். ராஜூ ஆகியோர், அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், சுமார் 20 நிமிடத்துக்கு பின்னர் அவர் எழுந்து சென்றார். இச்சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் அமளி, தள்ளுமுள்ளு: திமுக கவுன்சிலர்கள் மோதலால் போலீஸ் குவிப்பு

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இருதரப்பாக மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தள்ளுமுள்ளு, அமளியால் 10 நிமிடத்தில் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. போலீஸார் குவிக்கப்பட்டனர்.

திருநெல்வேலியில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் மு. அப்துல்வகாப் எம்எல்ஏ-வுக்கும், மாநகராட்சி மேயர் பி.எம். சரவணனுக்கும் இடையே பனிப்போர் நிலவிவருகிறது. மாவட்டச் செயலாளருக்கு ஆதரவாகவும், மேயருக்கு ஆதரவாகவும் மாநகராட்சி கவுன்சிலர்கள் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். மாநகராட்சி கூட்டங்களின்போது இருதரப்பு கவுன்சிலர்களும் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. நேற்று நடைபெற்ற கூட்டத்திலும் திமுக கவுன்சிலர்கள் இருதரப்பாக மோதிக் கொண்டனர்.

கூட்டத்தை தொடங்கிவைத்து மேயர் பேசும்போது, “முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருநெல்வேலி வர்த்தக மையத்தில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும்” என்றார். அப்போது நினைவு சின்னத்துடன் கருணாநிதியின் முழுவுருவ சிலையும் அமைக்க வேண்டும்” என்று கவுன்சிலர்கள் சிலர் தெரிவித்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்
மோதலாக மாறியது.

முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் பல்வேறு தீர்மானங்களை மேயர் வாசித்து கொண்டிருந்தபோது, திமுக கவுன்சிலர் ராமகிருஷ்ணன், “கூட்டத்தில் போதுமான கவுன்சிலர்கள் இல்லை என்பதால் தீர்மானங்களை ஒத்திவைக்க வேண்டும். கடந்த கூட்டத்திலேயே ஒத்திவைக்கப்பட்ட தீர்மானங்களை மீண்டும் நிறைவேற்ற கூடாது” என்று தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக பெரும்பாலான கவுன்சிலர்களும் கருத்து தெரிவித்தனர்.

மாநகராட்சி கூட்டம் தொடங்கியபோது வருகை பதிவேட்டில் 27 கவுன்சிலர்கள் மட்டுமே கையெழுத்திட்டிருந்தனர். ஆனால் தீர்மானங்களை நிறைவேற்ற 28-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இருக்க வேண்டும் என்று, கவுன்சிலர்கள் வாதிட்டனர். தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினர். “தீர்மானங்களை நிறைவேற்றாவிட்டால் மக்கள் பணிகள் நடைபெறாமல் போகும்” என்று மேயர் தெரிவித்தார். அவருக்கு ஆதரவாக சில கவுன்சிலர்கள் பேசினர்.

கவுன்சிலர்கள் இடையேயான மோதலால் மாநகராட்சியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

இதையடுத்து மேயர் எதிர்ப்பு மற்றும் ஆதரவு கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பாஜகவின் கைக்கூலியாக செயல்படுவதாக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் கத்தினர். இரு தரப்பு கவுன்சிலர்களும் மேயர் இருக்கை முன் கூடி வாக்குவாதம் செய்த நிலையில், சிறிது நேரத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ண மூர்த்தி அங்குவந்து இருதரப்பு கவுன்சிலர்களையும் விலக்கிவிட்டார். கூட்டத்தை 10 நிமிடம் ஒத்திவைப்பதாக தெரிவித்து மேயர் எழுந்து சென்றார். கூட்ட அரங்கிலிருந்த பெரும்பாலான கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனிடையே கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. . ஏராளமான போலீஸார் கூட்ட அரங்கின் வெளியேயும், மாநகராட்சி அலுவலக வளாகத்திலும் குவிக்கப்பட்டிருந்தனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்