அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பள்ளப்பட்டி நகர்மன்ற 15வது வார்டு உறுப்பினர் ராஜினாமா

By ஜி.ராதாகிருஷ்ணன்

கரூர்: கரூர் மாவட்டம் பள்ளபட்டி நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. திமுக கூட்டணி வார்டு உறுப்பினர்கள் 22 பேர், சுயேட்சைகள் 5 பேர் உள்ளனர். திமுகவை சேர்ந்த முனவர்ஜான் நகர்மன்றத் தலைவராகவும், தோட்டம் பஷீர் துணைத்தலைவராகவும் உள்ளனர்.

பள்ளப்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் முனவர்ஜான் தலைமையில் நகர்மன்ற கூட்டம் இன்று (ஏப். 28) நடைபெற்றது. கூட்டத்தில், வார்டு உறுப்பினர்கள் தங்கள் பகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர். அப்போது, திமுகவை சேர்ந்த 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் முகமது ஜமால் தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனக் கூறி வார்டு உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக நகராட்சி ஆணையரிடம் கடிதம் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

முகமது ஜமால் செய்தியாளர்களிடம் கூறியது. பள்ளப்பட்டி நகராட்சியில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மக்கள் கோரிக்கையை முன்வைத்து அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எவ்வித நடவடிக்கையும் நகர்மன்ற தலைவரும், நகராட்சி அதிகாரிகளும் மேற்கொள்ளவில்லை. நகர்மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு தரப்படுவதில்லை. நகராட்சியில் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது. திமுக வார்டு உறுப்பினராக இருந்த பொழுதும், தனது பகுதி மக்களின் தனது கோரிக்கைகளை நிறைவேற்ற நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டியதால் ராஜினாமா கடிதம் அளித்துள்ளேன். 35 ஆண்டுகளாக திமுகவில் உறுப்பினராகவும் தற்போது பள்ளப்பட்டி 15-வது வார்டில் திமுக கிளை செயலாளராகவும் உள்ளேன் என்றார்.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் குமரனிடம் கேட்டபோது, அவர் என்னிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். அதில் நான் முடிவெடுக்க முடியாது. நகர்மன்றத் தலைவரிடம் தான் அவர் கடிதம் வழங்க வேண்டும் என்றார். நகர்மன்றத் தலைவர் முனவர்ஜான் கூறியது, அதிகாரபூர்வமாக என்னிடம் ராஜினாமா கடிதம் எதுவும் அவர் வழங்கவில்லை என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE