உழவர் சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு ரூ.1500 நுழைவுக் கட்டணம்: உயர் நீதிமன்றம் அதிருப்தி

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: சேலம் மாவட்டம், காருவள்ளி வார சந்தைக்கு கரும்பு கொண்டு வரும் டிராக்டர்களுக்கு தலா ரூ.1500 நுழைவுக்கட்டணம் வசூலிப்பது உழவர் சந்தை அமைக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைத்துவிடும் என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் சீனிவாசன் என்ற விவசாயி தாக்கல் செய்த மனுவில், சேலம் மாவட்டத்தில் உள்ள காருவள்ளி கிராமத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில், வாரச்சந்தை நடத்தப்படுகிறது. 50 ஆண்டுகளாக நடந்துவரும் இந்த சந்தைக்கு விவசாய பொருட்களையும், கால்நடைகளையும் விற்கவும், வாங்கவும் வருவோரிடம் ஒப்பந்ததாரர் நுழைவுக் கட்டணம் வசூலித்து வருகிறார்.

கால்நடைகளுக்கு தலா நூறு ரூபாயும், 30 கிலோ காய்கறிகளுக்கு 50 ரூபாயும், கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்களுக்கு தலா 1500 ரூபாயும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிக நுழைவு கட்டணம் வசூலிப்பது குறித்து அரசு அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், பரிசீலிக்கப்படவில்லை. மேலும் வசூலிக்கப்படுகிற நுழைவுக் கட்டணத்துக்கு ரசீதும் வழங்கப்படுவது இல்லை" என்று மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் முத்துகுமார், மனுதாரர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுக்களுக்கு எந்த ஆதாரங்களும் இல்லை என தெரிவித்தார்.

இதையடுத்து, விவசாயிகளிடம் ரூ.1500, நுழைவுக் கட்டணம் வசூலிப்பது, உழவர் சந்தையின் நோக்கத்தை சிதைத்துவிடும் என அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் புகார் மனுவை இரண்டு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க சேலம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.

மேலும், உழவர் சந்தைக்கு வரும் விவசாயிகளிடம் நியாயமான நுழைவுக் கட்டணம் வசூலிப்பதையும், ரசீது வழங்குவதையும் உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE