கோடை விடுமுறை கால அவசர வழக்குகளை விசாரிக்க 29 நீதிபதிகள்: சென்னை உயர் நீதிமன்றம் 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: கோடை விடுமுறை காலத்தில் தாக்கல் செய்யப்படும் அவசர வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா உள்ளிட்ட 29 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் பி.தனபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மே முதல் வாரம் மட்டும் செவ்வாய் மற்றும் புதன்கிழமை மனு தாக்கல் செய்யலாம். அவை வியாழன் மற்றும் வெள்ளி கிழமையில் விசாரிக்கப்படும்.

மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய்க் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம். அந்த மனுக்கள் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் விசாரிக்கப்படும்.

கோடை விடுமுறை காலத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜெ.சத்யநாராயண பிரசாத், ஜி.கே.இளந்திரையன், எஸ்.சௌந்தர், அனிதா சுமந்த், எம்.நிர்மல்குமார், சுந்தர் மோகன், பி.பி.பாலாஜி, கே.ஜி.திலகவதி, சி.வி.கார்த்திகேயன், செந்தில்குமார் ராமமூர்த்தி, ஏ.ஏ.நக்கீரன், கே.குமரேஷ்பாபு, முகமது சபீக், பி.புகழேந்தி, சத்திகுமார் சுகுமார குரூப், வி லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரிக்க உள்ளனர்.

இதேபோல, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.விஜயகுமார், ஆர்.தாரணி, ஜி.ஆர்.சுவாமிநாதன், எஸ்.ஸ்ரீமதி, ஆர்.கலைமதி, என்.மாலா, டி.வி.தமிழ்ச்செல்வி, எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா, பி.வடமலை ஆகியோர் விசாரிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக விடுமுறை கால அமர்வுகளில் தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் வழக்குகளை விசாரிக்காமல், நிர்வாக பணிகளில் மட்டுமே ஈடுபடுவது வழக்கம். ஆனால் கடந்த 2020ம் ஆண்டு கரோனா ஊரடங்கு காலத்தில் அமைக்கப்பட்ட கோடைகால அமர்வுகளில், கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவமனைகளுக்குத் தேவையான வசதிகள் குறித்த வழக்குகள் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த சஞ்ஜிப் பானர்ஜி தலைமையிலான அமர்வே விசாரித்தது.

இந்நிலையில், தற்போதைய பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மே 24ம் தேதி ஓய்வுபெறவுள்ள நிலையில், கோடை கால அமர்வுகளில் சக நீதிபதியுடன் சேர்ந்து அவசர வழக்குகளை விசாரிக்க உள்ளார்.அதன்படி மே 15 முதல் 21ஆம் தேதி வரை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்விலும், மே 22, 23, 24 ஆகிய தேதிகளில் சென்னையில் நீதிபதி முகமது சபீக் அடங்கிய அமர்விலும் வழக்குகளை விசாரிக்க உள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE