எந்த மெட்டில் பாடினாலும் அது தமிழ்த்தாய் வாழ்த்து என அண்ணாமலைக்கு தெரியாதா?- கே.பாலகிருஷ்ணன் கேள்வி 

By செய்திப்பிரிவு

சென்னை: "எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ்த்தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ் தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "கர்நாடகத்தில் பாஜக நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் அவமதிக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியதாகும்.தமிழ்த்தாய் வாழ்த்தினை இசைக்கவிட்டு பாதியில் நிறுத்தி அவமதித்துள்ளனர். அப்போது மேடையிலேயே நின்றுகொண்டிருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, எந்த எதிர்வினையும் செய்யவில்லை.

சமூக ஊடகங்களில் இந்த காட்சியைப் பார்த்த பலரும் கண்டித்து வருகின்றனர்.இப்போது அண்ணாமலை பாடலின் மெட்டு சரியில்லை என்று வித்தியாச விளக்கத்தை கொடுத்துள்ளார். எந்த மெட்டில் பாடினாலும் பாடப்படுவது தமிழ்த்தாய் வாழ்த்து‌ என அண்ணாமலைக்கு தெரியாதா? தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த பாஜக, தமிழ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கர்நாடக மாநிலம் சிவமோகாவில் தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற தமிழ் வாக்காளர்கள் மாநாட்டின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, அதை அம்மாநில பாரதிய ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஈஸ்வரப்பா குறுக்கிட்டு பாதியில் நிறுத்தச் செய்ததுடன், அதற்கு மாற்றாக கன்னட மொழி வாழ்த்தை இசைக்கச் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான காணொளி சமூகவலைதளங்களில் பரவியது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE