கேரளாவில் சீசன் தொடக்கம்: பழநியில் விற்பனைக்கு குவியும் பலாப்பழம்

By ஆ.நல்லசிவன்

பழநி: சீசனை முன்னிட்டு கேரளாவில் இருந்து பழநிக்கு பலாப்பழங்கள் டன் கணக்கில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு கோடை விடுமுறையை முன்னிட்டு வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களின் வருகை தினமும் அதிகரித்து வருகிறது. இதனால் மா, கொய்யா, பலா உள்ளிட்ட பழங்களை டன் கணக்கில் வாங்கி வந்து விற்பனை செய்கின்றனர்.

தற்போது சீசனை முன்னிட்டு கேரள மாநிலம் பாலக்காடு, ஆலப்புழா, கொச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து பழநிக்கு பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகின்றன. வரத்து அதிகரிப்பால் விலை குறைந்து, ஒரு கிலோ ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை குறைவு என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். இதனால் விற்பனை அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இது குறித்து பழநியைச் சேர்ந்த வியாபாரி தங்கம் கூறுகையில், கேரளாவில் இருந்து தினமும் குறைந்தது 5 முதல் 10 டன் பலா விற்பனைக்கு வருகிறது. கொடைக்கானல், தாண்டிக்குடி, சிறுமலையில் இருந்து வரத்து வந்தால் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது. பலாப்பழம் ஒரு கிலோ ரூ.20-க்கும், நான்கு பலாச்சுளைகள் ரூ.10-க்கும் விற்பனையாகிறது, என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE