டெல்லி சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார்.

சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் அரசு பன்னோக்குஉயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை திறப்பு விழாவுக்கு வருமாறு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்வுவை அழைப்பதற்காக முதல்வர் நேற்று டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார்.

அதன்படி, முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு நேற்றிரவு வந்தார். அவர் செல்லவிருந்த விமானத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முதல்வர் சுமார் ஒன்றரை மணி நேரம் விமான நிலையத்தில் காத்திருக்க நேரிட்டது. அதனால், முதல்வரின் டெல்லி பயணம் கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டு, விமான நிலையத்தில் இருந்து வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை விமானம் மூலம் முதல்வர் ஸ்டாலின் டெல்லி சென்றடைந்தார். டெல்லியில் அவரை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வரவேற்றார். திமுகவின் பிற முக்கிய நிர்வாகிகளும் உடனிருந்தனர். மேலும், போலீஸாரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையும் முதல்வருக்கும் வழங்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE