தருமபுரியில் யானை தாக்கி முதியவர் பலி: ஒரே வாரத்தில் 2-வது சம்பவம்

By எஸ்.ராஜா செல்லம்

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 2 யானைகதாக்கியதில் முதியவர் உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வட்டம் பெரிய மொரசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் (70). இவர் இன்று (வியாழன்) காலை அருகிலுள்ள ஏரிக்கரை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது, அப்பகுதியில் முகாமிட்டிருந்த 2 யானைகள் வேடியப்பனை தாக்கியுள்ளன. இந்தச் சம்பவத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பாலக்கோடு வனச்சரக பகுதிகளில் இருந்து அண்மைக் காலமாக காட்டு யானைகள் வெளியேறி விளைநிலங்கள், நீர்நிலைகளில் முகாமிட்டபடி சுற்றி வருகின்றன. இவ்வாறு நடமாடும் யானைகள் சில நேரங்களில் மனிதர்களைத் தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்துகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாரண்ட அள்ளி அருகே இருளர் பழங்குடியினத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஒருவர் வனப்பகுதியில் உள்ள குடியிருப்பில் இருந்து வேலைக்காக காட்டுவழியே நடந்து சென்றபோது யானை தாக்கி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே யானை தாக்குதலில் உயிரிழந்த முதியவர் வேடியப்பன்

இந்நிலையில், ஒரே வாரத்தில் தற்போது யானை தாக்குதலால் மீண்டும் ஓர் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலக்கோடு வனச்சரக வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். யானைகள் வனத்தை விட்டு வெளியேறுவதை தடுக்கும் வகையில் அரசு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE