சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டத்தை எதிர்த்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்குகள் தொடர்பாக ஆறு வாரங்களுக்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி இயற்றிய தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு உள்ளிட்ட நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரபட்டுள்ளன.
இந்த வழக்குகள் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு, விதிகளை அறிவித்துள்ள நிலையில், இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும், ரம்மி திறமைக்கான விளையாட்டு என நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், இந்தச் சட்டத்தில் ரம்மி விளையாட்டு, அதிர்ஷ்ட விளையாட்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
திறமைக்கான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட ரம்மியை தடை செய்ய முடியாது எனவும், இந்தச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனவும் வாதிட்டார்.
» “தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள 8,366 நீர்நிலைகளை மீட்க நடவடிக்கை எடுப்பீர்” - அன்புமணி
ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமாசுந்தரம், 1930-ம் ஆண்டின் தமிழ்நாடு விளையாட்டு சட்டத்தில் இணையதளத்தைச் சேர்த்து, 2021-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் ரத்து செய்யப்பட்டது எனவும், அந்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் எந்த தடையும் விதிக்காத நிலையில், அதற்கு பதிலாக புதிய சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், மாநில அரசால் இந்த சட்டத்தை இயற்ற முடியாது எனவும் வாதிட்டார்.
திறமைக்கான விளையாட்டை சூதாட்டமாக கருத முடியாது எனவும், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகள் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல; திறமை விளையாட்டு எனவும் வாதிட்டார். ஒட்டு மொத்தமாக ஆன் லைன் விளையாட்டுக்களுக்கு தடை விதிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனவும், திறமைக்கான விளையாட்டுக்களை முறைப்படுத்த முடியுமே தவிர தடை செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு சட்டம் இயற்றினால், மாநில அரசு அதே பிரச்சினை தொடர்பாக சட்டம் இயற்ற முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ஐபிஎல் போட்டிகளுக்கு கூட, ட்ரீம் 11 விளையாட்டு உள்ளது எனவும், நாடு முழுவதும் விளையாடப்படும் அதை எப்படி தடை செய்ய முடியும் எனவும் கேள்வி எழுப்பிய அவர், சட்டப்படி கடும் நடவடிக்கைகள் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், சூதாட்டம் குறித்த இந்தச் சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு தான் அதிகாரமில்லை எனவும் விளக்கினார்.
மாநில சட்டம், தடை மட்டும் விதிக்க முடியுமே தவிர, இணையதளத்தில் இருந்து நீக்க முடியாது எனவும், அதை மத்திய அரசு தான் செய்ய வேண்டும் எனவும் விளக்கினார். திறமையை விட அதிர்ஷ்டம் மேலோங்கி இருக்கும் விளையாட்டுக்களை தடை செய்ய சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனவும், இந்த தளங்கள் பணம் சம்பாதித்து குடும்பங்களை சீரழிக்கின்றன எனவும், அப்பாவி குடும்பங்களை பாதுகாக்க வேண்டும் எனவும், மனுதாரர்களுக்கு பாதுகாப்பும் வழங்கக் கூடாது எனவும் அவர் வாதிட்டார்.
மற்றொரு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், மக்கள் பணத்தை பறிக்க ஆன் லைன் நிறுவனங்கள் முயற்சிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு தவறு என மறுத்தார். தற்போதைய நிலையில் கடும் நடவடிக்கைகள் எதுவும் எடுக்க கூடாது என உத்தரவிட வேண்டும் எனக் கோரிய மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், பங்குச் சந்தை இழப்பால் ஏற்படும் மரணங்களை காரணம் காட்டி, தடை விதிக்க முடியுமா எனவும் கேள்வி எழுப்பினார். மேலும், இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்காவிட்டால், பல லட்சம் ரூபாய் புழங்கும் நிறுவனங்களை மூட வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்தார்.
விசாரணையின்போது, சமூக தீங்காக உள்ள ஆன்லைன் விளையாட்டுக்களால் மரணங்கள் நிகழ்வதாலும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாலும், அவற்றை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மக்கள் நலன்தான் மிக முக்கியம் எனவும் தெரிவித்தனர்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு தரப்பில் பதிலளிக்காமல் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்து, ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago