தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் கரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு 68 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டு, மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல், மஞ்சை மாற்று அறுவை சிகிச்சை போன்ற உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான புதிய பிரிவு விரைவில் துவங்கப்பட உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சிசிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு வருகின்றனர்.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு 65 கோடி மதிப்பில் புதிய நரம்பியல் துறை கட்டிடம், கேஎம்சியில் 114 கோடியில் புதிய கட்டிடம், ஸ்டான்லி மருத்துவமனையில் 147 கோடியில் செவிலியர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் புதிய கட்டிடம், பல் மருத்துவ கல்லூரிக்கு புதிய மாணவியர் தங்கும் விடுதி, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு உள்ளிட்டவை தொடர்பாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல, அனைத்து பெரிய மருத்துவமனைகளிலும் கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் கரோனா தொற்று 500க்கும் மேல் பதிவாகி இருந்தது. தற்பொழுது படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE