ராஜபாளையம் | சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் படுகாயம் - உறவினர்கள் சாலை மறியல்

By அ.கோபால கிருஷ்ணன்

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியில் சைக்கிள் மீது கார் மோதியதில் சிறுவன் காயமடைந்தார். இதனையடுத்து அப்பகுதியில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ராஜபாளையம் அருகே சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு ஜான்சன்(15), மார்ட்டின் (13) என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெகதீஸ்வரன் கொத்தனார் வேலையையும், முருகேஸ்வரி தையல் வேலையையும் பார்த்து வருகின்றனர். மார்ட்டின் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை 8:30 மணி அளவில் மார்டின் சைக்கிளில் சென்றபோது, கேரளாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் சைக்கிளில் மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த சிறுவனை அப்பகுதி மக்கள் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மார்ட்டின் கொண்டு செல்லப்பட்டார்.

இதை அறிந்த உறவினர்கள் அப்பகுதியில் விபத்துகளை தவிர்க்கும் வகையில் வேகத்தடை அமைக்க வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் காலை 9 மணி முதல் 10 மணி வரை மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து வந்த ராஜபாளையம் டி.எஸ்.பி ப்ரீத்தி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பகுதியில் நிரந்தர வேகத்தடை அமைக்க ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE