அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது - டெல்லியில் இபிஎஸ் பேட்டி

By செய்திப்பிரிவு

டெல்லி: அதிமுக- பாஜக கூட்டணி தொடர்வதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளராகபதவியேற்ற பின் முதல் முறையாக பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது.

எங்களுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படும் கட்சிகள். திமுகவில் உள்ளது போன்ற அடிமை கட்சிகள் இல்லை. அந்தந்த கட்சிகளுக்கு கொள்கை இருக்கிறது. கொள்கையின் அடிப்படையில் அவர்கள் செயல்பாடுவார்கள். கூட்டணி என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்.

ஓபிஎஸ் மாநாடு தொடர்பான கேள்விக்கு, அவரைத் தான் கேட்க வேண்டும் என்று தெரிவித்தார். பிடிஆர் ஆடியோ தொடர்பான கேள்விக்கு, "அதிர்ச்சியூட்டும் தகவல் ஆடியோவில் உள்ளது. இந்த ஆடியோ தொடர்பாக ஆய்வு செய்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை ஆய்வு செய்து, உண்மைத் தன்மையை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சரிடம் தெரிவித்துள்ளோம்" என்று கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE