ஆவடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை: திருவள்ளூர் ஆட்சியருக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: ஆவடி மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை, அவற்றில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் தொடர்பாக அறிக்கைதாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் ஆட்சியருக்கு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

`இந்து தமிழ் திசை' நாளிதழில் கடந்த 2020-ம் ஆண்டு டிச.21-ம் தேதி `ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஆவடி விளிஞ்சியம்பாக்கம் ஏரி: மழைநீரை சேமித்து வைக்கமுடியாத அவலம்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகி இருந்தது.அந்த செய்தியில் இடம்பெற்றிருப்பதாவது:

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் விளிஞ்சியம்பாக்கம் ஏரி அமைந்திருந்தது. இந்த ஏரி, அதைச் சுற்றியுள்ள மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கியது.

இந்நிலையில், நீர்வள ஆதாரத்துறையின் போதிய பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாததால், ஏரி ஆக்கிரமிக்கப்பட்டு அதன்பரப்பு 50 ஏக்கராக சுருங்கிவிட்டது. மேலும், இந்த ஏரி, பராமரிப்பின்றிக் கிடக்கிறது.

கவரபாளையத்தில் உள்ள கோவிந்த தாங்கல் ஏரியின் உபரிநீர், கால்வாய்கள் வழியாக விளிஞ்சியம்பாக்கம் ஏரிக்கு வரும். இந்தக் கால்வாய்களும் ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்விட்டன. இதனால் கனமழையால், நீர் வழிந்தோடமுடியாமல், அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டது. இதுபோன்ற ஆக்கிரமிப்புகளால் இப்பகுதியில் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. இவ்வாறு செய்தியில் இடம்பெற்றிருந்தது.

இதனடிப்படையில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகிறது.

நாளிதழில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அடிப்படையில் ஆய்வு செய்து, அறிக்கை அளிக்க, பொதுப்பணித் துறை பொறியாளர், மாவட்ட ஆட்சியர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மூத்த அதிகாரி ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

மேலும், தொடர்புடைய துறைகள், ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆகியோர் பதில் அளிக்கவும், அந்த ஏரி ஆக்கிரமிப்புகள் குறித்துஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால், கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக நீர்வள ஆதாரத்துறையும், வருவாய்த் துறையும் பதில் அளிக்கவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு, அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

அப்போது அமர்வின் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், ``ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஏரிகளின் எண்ணிக்கை, அவற்றின் பரப்பளவு, அவற்றில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளின் அளவு ஆகியவை குறித்து மாவட்டஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை மே 12-ம் தேதிக்குத் தள்ளிவைக்கப்படுகிறது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE