மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய ‘கைதிகள் செய்பொருட்கள் அங்காடி’

By என். சன்னாசி

மதுரை: மதுரை மத்திய சிறையில் நவீன வசதிகளுடன் கூடிய கைதிகள் செய்பொருட்கள் விற்பனை அங்காடியை டிஜிபி அம்ரேஷ்பூசாரி திறந்து வைத்தார்.

தமிழக சிறைத்துறை டிஜிபியாக அம்ரேஷ் பூசாரி பொறுப்பேற்ற பின், சிறைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக மதுரை மத்திய சிறையில் கைதிகள் தயாரிக்கும் பல்வேறு பொருட்களை விற்கும் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த சிறை செய்பொருட்கள் விற்பனை அங்காடி, விவசாயிகளுக்கு உதவும் மண் பரிசோதனை கருவிகளை கைதிகள் தயாரிக்கும் பயிற்சிக்கூடம் அமைக்கப்பட்டது.

இவற்றின் திறப்பு விழா நேற்று நடந்தது. டிஜிபி அம்ரேஷ் பூசாரி பங்கேற்று திறந்து வைத்தார். கைதிகள் தயாரித்த உணவுப்பொருள் உள்ளிட்ட பொருட்களை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து, வளாகத்திலுள்ள பெண்கள், ஆண்கள் சிறை மற்றும் நூலகம், இசை கருவி பயிலரங்க கூடம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பார்வையிட்டார். மின் மிதிவண்டி ரோந்து பணி குறித்தும் கேட்டறிந்தார்.

மேலும், பணியில் சிறந்து விளங்கிய சிறைத்துறை அதிகாரிகள், காவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை அவர் வழங்கினார். கைதிகளுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பேராசிரியை பர்வீன் சுல்தான் பேசினார். நிகழ்ச்சியில் மதுரை சிறைத்துறை டிஐஜி பழனி, கூடுதல் கண்காணிப்பாளர் பரசுராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE