தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த மற்றொரு நபரை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியனை வல்லநாடு அருகே வைத்து போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மற்றொரு நபரான கலியாவூரை சேர்ந்த முருகன் மகன் மாரிமுத்து (35) என்பரை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து அருகே வைத்து மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை காலை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவர் மீதும் முறப்பநாடு உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் மணல் கடத்தல் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து முறப்பநாடு, கலியாவூர், வல்லநாடு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம்: இதனிடையே, லூர்து பிரான்சிஸ் படுகொலையை கண்டித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் மு.கணேசபெருமாள், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க மாநில தலைவர் அழகிரிசாமி உள்ளிட்ட திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசனை சந்தித்து அளித்த கோரிக்கை மனுவில், ‘கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்களை போல கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் பாதுகாப்பு வழங்க தனி சட்டம் இயற்ற வேண்டும்.
இதுவரை மணல் திருட்டு, மரம் வெட்டுதல் போன்றவை தொடர்பாக வருவாய் துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் மட்டும் தெரிவிப்போம். காவல் நிலையங்களில் புகார் அளிக்கமாட்டோம். மணல் கடத்தல் தொடர்பாக லூர்து பிரான்சிஸ் கடந்த 13-ம் தேதி கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க தவறிய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ பரபரப்பு: இந்நிலையில், லூர்து பிரான்சிஸ் கொலை தொடர்பாக தூத்துக்குடி அருகேயுள்ள மறவன்மடம் கிராம நிர்வாக அலுவலர் பிரேமலதா பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் பிரேமலதா பேசியுள்ளதாவது: "லூர்து பிரான்சிஸ் ஆதிச்சநல்லூரில் பணியாற்றியபோது சிலரால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அவர் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் இருந்து தூத்துக்குடி தாலுகாவுக்கு மாறுதல் கேட்டார். இது தொடர்பாக சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம் நேரில் தெரிவித்தோம். அப்போது தூத்துக்குடி தாலுகாவில் காலியிடம் இல்லாததால் ஓட்டப்பிடாரம் தாலுகாவுக்கு போகிறீர்களா என ஆட்சியர் கேட்டார். ஆனால், லூர்து பிரான்சில் மறுத்துவிட்டார். அதன்பிறகு தூத்துக்குடியில் 2 இடங்கள் காலியானது. அதில் அவரை நியமித்திருக்கலாம்.
இது தொடர்பாக சங்கத்தினர் ஆட்சியரிடம் தெரிவித்திருந்தால் நிச்சயமாக நியமித்திருப்பார். ஆனால், நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களை தூத்துக்குடி தாலுகாவுக்கு கொண்டு வந்துவிட்டனர். அப்போது, லூர்து பிரான்சிஸை தூத்துக்குடி தாலுகாவுக்கு மாற்றியிருந்தால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கமாட்டார்" என்று அந்த ஆடியோவில் தெரிவித்துள்ளார். மேலும், சங்க நிர்வாகிகள் மீது கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இந்த ஆடியோ கிராம நிர்வாக அலுவலர்கல் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பின்புலம் என்ன? - தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசைபாண்டியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லூர்து பிரான்சிஸ் (53). இவர், ஸ்ரீவைகுண்டம் வட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் நேற்று மதியம் 12.30 மணியளவில் முறப்பநாட்டில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த 2 நபர்கள் லூர்து பிரான்சிஸை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலை தொடர்பாக முறப்பநாடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முறப்பநாடு பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் கலியாவூரை சேர்ந்த ராமசுப்பு என்ற ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் இருச்சக்கர வாகனம் மூலம் ஆற்று மணலை எடுத்து சட்டவிரோதமாக கடத்தியுள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் கடந்த 13-ம் தேதி முறப்பநாடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரும் அலுவலகத்துக்குள் புகுந்து லூர்து பிரான்சிஸை வெட்டிக் கொலை செய்தது போலீஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் உடல் புதன்கிழமை சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. | வாசிக்க > விஏஓ லூர்து பிரான்சிஸ் உடல் நல்லடக்கம்: தூத்துக்குடி ஆட்சியர், எம்எல்ஏ, பொதுமக்கள் இறுதி அஞ்சலி
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago